ஒரு காலத்தில் கடும் வெயிலை சமாளிக்க நம் முன்னோர்கள் மர நிழலில் ஓய்வெடுப்பது, மண் பானை தண்ணீர் குடிப்பது, குளிர்ச்சியான வீடுகளில் தங்குவது, பருத்தி ஆடைகளை அணிவது போன்ற எளிய இயற்கை வழிமுறைகளையே பின்பற்றினர். ஆனால், காலநிலை மாற்றம் மற்றும் நகரமயமாக்கலால் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருவதால், தற்போது அதிநவீன தொழில்நுட்பங்கள் வெயிலில் இருந்து பாதுகாக்க புதிய தீர்வுகளை உருவாக்கி வருகின்றன.
அந்த வகையில், ஜப்பானில் மனிதர்கள் அமர்ந்து உடலை குளிர்வித்துக்கொள்ளும் வகையில் சிறப்பு ‘மனிதர்களுக்கான பிரிட்ஜ்’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஜப்பானில் உருவாக்கப்பட்டுள்ள இந்த சாதனம், அந்நாட்டில் உள்ள குளிர்பான வெண்டிங் மெஷின்களின் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு நபர் உள்ளே அமரக்கூடிய அளவில் பெட்டி வடிவில் இது தயாரிக்கப்பட்டுள்ளது. உடல் அதிகமாக குளிர்ந்து பாதிப்பு ஏற்படாமல் இருக்க, 20 நிமிடங்கள் கடந்ததும் இந்த சாதனம் தானாகவே செயல்பாட்டை நிறுத்தும் வசதியும் இதில் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், வழக்கமான ஏர் கண்டிஷனர்களுடன் ஒப்பிடும்போது, இது சுமார் பாதி அளவிலேயே மின்சாரத்தை பயன்படுத்தும் என கூறப்படுகிறது. தற்போது, ஜப்பானில் சில நகராட்சி அலுவலகங்கள் மற்றும் தொழிற்சாலைகளில், பொதுமக்கள் மற்றும் ஊழியர்கள் கடும் கோடை வெப்பத்தில் இருந்து தற்காலிக நிவாரணம் பெறும் வகையில் இந்த சாதனங்கள் நிறுவப்பட்டு வருகின்றன. இந்த மனிதர்களுக்கான குளிரூட்டும் சாதனத்தின் விலை இந்திய மதிப்பில் சுமார் ரூ.9 லட்சம் (1.5 மில்லியன் ஜப்பானிய யென்) என தகவல்கள் தெரிவிக்கின்றன.
காலநிலை மாற்றம் காரணமாக உலகம் முழுவதும் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இதுபோன்ற புதுமையான தொழில்நுட்பங்கள் மக்களின் அன்றாட வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கத் தொடங்கியுள்ளன. எதிர்காலத்தில் கடும் வெப்பத்தை சமாளிக்க இதுபோன்ற குளிரூட்டும் சாதனங்கள் மேலும் பரவலாக பயன்படுத்தப்படலாம் என்றும், மின்சாரச் சிக்கனத்துடன் மனிதர்களின் உடல்நலத்தையும் பாதுகாக்கும் வகையில் புதிய தொழில்நுட்பங்கள் தொடர்ந்து உருவாகி வரும் என்றும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
Also Read: இந்த 5 விதைகளை தினமும் சாப்பிடுங்க… அடிக்கடி டாக்டர்கிட்ட போக வேண்டிய அவசியமே இருக்காது!



