மத்திய அரசின் ‘பிரதான் மந்திரி சூர்யா கர் யோஜனா’ திட்டமானது, சாமானிய மக்களின் மாதந்திர மின்சாரக் கட்டணச் சுமையை கணிசமாக குறைப்பதிலும், பசுமை ஆற்றல் பயன்பாட்டை ஊக்குவிப்பதிலும் முக்கியப் பங்கு வகித்து வருகிறது. வீடுகளின் மேற்கூரையில் சூரிய மின்சக்தி தகடுகளை அமைப்பதன் மூலம், பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான மின்சாரத்தைத் தாங்களே தயாரித்துக் கொள்வதோடு, அரசின் நிதி உதவியையும் பெற இத்திட்டம் வழிவகுக்கிறது.
இத்திட்டத்தின் கீழ் மானியம் பெற விரும்பும் தகுதியுள்ள மின் நுகர்வோர், அரசின் அதிகாரப்பூர்வ இணையதமான https://pmsuryaghar.gov.in வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். இணையதளத்தில் பதிவு செய்யும் போது, தங்களுடைய மாநிலம், மின் விநியோக நிறுவனம் (DISCOM), நுகர்வோர் எண் மற்றும் அலைபேசி எண் போன்ற அடிப்படை விவரங்களை வழங்கி முதலில் ஒரு கணக்கை உருவாக்கிக் கொள்ள வேண்டும். அதன் தொடர்ச்சியாக, கணக்கில் உள்நுழைந்து சோலார் அமைப்பை நிறுவுவதற்கான விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கலாம்.
சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களைச் சம்பந்தப்பட்ட மின் விநியோக நிறுவனம் ஆய்வு செய்து ஆரம்பகட்ட ஒப்புதலை வழங்கும். அதன்பின்னர், அரசின் அங்கீகாரம் பெற்ற ஏஜென்சிகள் மூலமாக மட்டுமே சோலார் பேனல்களை நிறுவ வேண்டும். போலி நிறுவனங்களிடம் ஏமாறாமல் இருக்க, அரசு இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ள அங்கீகரிக்கப்பட்ட முகமைகளைத் தேர்ந்தெடுப்பதே பாதுகாப்பானது என்று துறை சார்ந்த வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர்.
சோலார் தகடுகள் பொருத்தப்பட்ட பிறகு, உற்பத்தியாகும் மிகை மின்சாரத்தைக் கணக்கிடும் ‘நெட் மீட்டர்’ (Net Meter) அமைப்பதற்கான கோரிக்கை அளிக்கப்படும். இதனைத் தொடர்ந்து, அதிகாரிகள் நேரடியாக நேரில் வந்து தொழில்நுட்ப ஆய்வுகளை மேற்கொண்டு சான்றிதழ் வழங்குவர். அனைத்துச் சரிபார்ப்புகளும் வெற்றிகரமாக முடிந்தவுடன், பயனாளியின் வங்கிக் கணக்கிற்கு மானியத் தொகையை அனுப்பும் நடவடிக்கைகள் தொடங்கும்.
தற்போதைய மத்திய அரசின் விதிமுறைகளின்படி, கூரை-சார்ந்த சூரியமின் உற்பத்தி அமைப்பின் திறனுக்கு ஏற்ப மானியம் வழங்கப்படுகிறது. குறிப்பாக, 3 கிலோவாட் (kW) அல்லது அதற்கு அதிகமான திறன் கொண்ட அமைப்புகளை நிறுவுவோருக்கு அதிகபட்சமாக ரூ.78,000 வரை மானியமாக வழங்கப்படுகிறது. இருப்பினும், அவ்வப்போது வெளியாகும் அரசு வழிகாட்டுதல்களுக்கு ஏற்ப இந்த மானிய விவரங்களில் மாற்றங்கள் இருக்கக்கூடும் என்பதால், விண்ணப்பிக்கும் முன்பாக இணையதளத்தில் உள்ள விவாதங்களை முழுமையாகப் படித்துத் தெரிந்துகொள்வது அவசியமாகும்.
Read More : அதே 3ம் தேதி..!! மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவித்த முக.ஸ்டாலின்..!!



