விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி விடுதலை சிறுத்தை கட்சி வேட்பாளர் ரவிக்குமாரை ஆதரித்து மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் பிரச்சாரம் மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் மாலை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மனிதநேய மக்கள் கட்சி ஆகியவற்றின் சார்பில் இப்தார் நோன்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர் பொன்முடி, அமைச்சர் செஞ்சி மஸ்தான் மற்றும் எம்.எல்.ஏக்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதில் முதலாவதாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் இப்தார் நோன்பு நிகழ்ச்சி குறித்து பேசினார். அப்போது, நோன்பு திறந்த பின்னர் அனைவரும் பானை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என உறுதிமொழி ஏற்க வேண்டும் என கூறினார். அப்பொழுது அருகில் இருந்த அமைச்சர் பொன்முடி, திடீரென எழுந்து அமைச்சர் செஞ்சி மஸ்தான் கையில் இருந்து மைக்கை பிடுங்கினார். அப்போது செஞ்சி மஸ்தான், அமைச்சர் பொன்முடியிடம் பேசுகையில் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், அங்கு சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.