மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலி மாவட்டத்தில் உள்ள அரசு உதவி பெறும் பழங்குடியினர் உறைவிடப் பள்ளியில் நடந்த பாம்பு கடி சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விடுதியில் தூங்கிக் கொண்டிருந்த 6 மாணவிகளை பாம்பு கடித்ததில், 3 மாணவிகள் உயிரிழந்தனர். மேலும் 3 மாணவிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மகாராஷ்டிர மாநிலத்தின் கட்சிரோலி மாவட்ட தனோரா தாலுகாவில் உள்ள ஜப்தலை கிராமத்தில் அரசு உதவி பெறும் பழங்குடியினர் உறைவிடப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி விடுதியில் மாணவிகள் இரவு நேரத்தில் தரையில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தபோது, திடீரென அறைக்குள் பாம்பு புகுந்து அங்கிருந்த 6 மாணவிகளை கடித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பாம்பு கடிக்கு ஆளான மாணவிகளில் 8, 12 மற்றும் 14 வயதுடைய 3 மாணவிகள் பரிதாபமாக உயிரிழந்தனர், மற்ற 3 மாணவிகளும் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களின் உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
பலாலி விருத்திக்கு பாம்பு புகுந்து 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், பள்ளி விடுதியில் மாணவிகளின் பாதுகாப்பு தொடர்பாகவும் கேள்விகள் எழுந்துள்ளன.
சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அவிஷ்யந்த் பாண்டா தெரிவித்துள்ளார். மாணவிகள் தங்கியிருந்த இடத்தில் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தனவா, பள்ளி நிர்வாகம் தேவையான பாதுகாப்பு விதிமுறைகளையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் முறையாக பின்பற்றியதா என்பது குறித்து விசாரணை நடைபெறும் என அவர் கூறியுள்ளார்.
மேலும், பழங்குடியினர் மேம்பாட்டுத் துறையைச் சேர்ந்த குழுக்கள் சம்பவம் நடைபெற்ற இடத்துக்குச் சென்று தேவையான தகவல்களை சேகரிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணையில் பள்ளி நிர்வாகத்தின் அலட்சியம் அல்லது பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் அவிஷ்யந்த் பாண்டா தெரிவித்துள்ளார்.



