வழக்கு விசாரணை என்ற பெயரில் தனிநபர்களை அழைக்கும் போது காவல்துறை கட்டாயம் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களை சென்னை உயர்நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
சென்னை தி.நகரைச் சேர்ந்த ராஜா என்பவர், விசாரணை என்ற போர்வையில் காவல்துறையினர் தன்னை துன்புறுத்தக் கூடாது எனக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முக்கிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளார்.
அவரது உத்தரவில், “விசாரணை என்ற பெயரில் காவல்துறை துன்புறுத்துவதாக கூறி ஏராளமான மனுக்கள் நீதிமன்றத்திற்கு வருகின்றன. பொதுவாக காவல்துறையின் புலன் விசாரணையில் நீதிமன்றம் தலையிடுவதில்லை என்றாலும், விசாரணை என்ற பெயரில் அத்துமீறல்களும் துன்புறுத்தல்களும் நடப்பதாகக் கவனத்திற்கு வரும்போது நீதிமன்றம் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்காது” என்று சுட்டிக்காட்டினார்.
மேலும், “விசாரணைக்காக ஒருவரை அழைக்கும் போது உரிய சம்மன் கட்டாயம் அனுப்பப்பட வேண்டும். அதில் குறிப்பிட்ட நபர் எந்த தேதியில், எந்த நேரத்தில் ஆஜராக வேண்டும் என்ற விவரங்கள் தெளிவாக இடம்பெற வேண்டும். விசாரணை தொடர்பான அனைத்து விவரங்களையும் காவல் நிலைய நாளேட்டில் தவறாமல் பதிவு செய்ய வேண்டும்” என தெரிவித்தார்.
அத்துடன், விசாரணைக்கு அழைக்கப்படுபவர்களை எக்காரணம் கொண்டும் துன்புறுத்தக் கூடாது என்றும், முதற்கட்ட விசாரணை மற்றும் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்வது தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள வழிகாட்டுதல்களை காவல்துறையினர் தவறாமல் பின்பற்ற வேண்டும் என்றும் நீதிபதி தனது உத்தரவில் வலியுறுத்தியுள்ளார்.
Read More : ரேஷன் கடைகள் செயல்படும் நேரம் மாற்றமா..? அதிகாரிகளுக்கு பறந்த ஆர்டர்..!! கூட்டுறவுத்துறை அதிரடி..!!



