மேற்கு கொலம்பியாவில் திங்கள்கிழமை ஏற்பட்ட 7.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 130க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. பல கட்டிடங்கள் இடிந்து விழுந்த நிலையில், இடிபாடுகளில் பலர் சிக்கியுள்ளதால் மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க நிலவியல் ஆய்வு மையத்தின்தகவல்படி, இந்த நிலநடுக்கம் 107 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இதன் அதிர்வுகள் அண்டை நாடான ஈக்வடாரிலும் உணரப்பட்டன. கொலம்பிய தலைநகர் பகோட்டாவிற்கு மேற்கே 400 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சோகோ (Choco) பிராந்தியத்தில், சுமார் 4,800 மக்கள் வசிக்கும் சான் ஜோஸ் டெல் பால்மர் (San Jose del Palmar) என்ற பகுதியே இந்த நிலநடுக்கத்தின் மையமாக அமைந்துள்ளது. கட்டிட இடிபாடுகளுக்கு அடியில் பொதுமக்கள் சிக்கியிருப்பதால், பலர் காயமடைந்துள்ளனர். பாதுகாப்பு கருதி மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுள்ளனர்.
பெரேரா நகரில் மட்டும் 18 பேர் உயிரிழந்துள்ளதாக அந்த நகரின் மேயர் மொரிசியோ தெரிவித்தார். மேலும், அங்கு நிலைமை “மிகவும் கவலைக்கிடமாக” இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். உள்ளூர் ஊடகங்கள் வெளியிட்டுள்ள காட்சிகளில், பெரேரா, காலி மற்றும் குய்ப்டோ ஆகிய நகரங்களில் வீடுகள் மற்றும் சிறிய கட்டிடங்கள் இடிந்து விழுவது பதிவாகியுள்ளது. பகோட்டாவிலிருந்து 300 கி.மீ மேற்கே அமைந்துள்ள மனிசலேஸ் நகரில், பழமையான நியோ-கோதிக் கதீட்ரல் தேவாலயத்தின் கோபுரங்களில் ஒன்று இடிந்து விழுந்தது.
மத்திய மற்றும் மேற்கு கொலம்பியாவில் “டெம்ப்ளோரெஸ்” (temblores) என அழைக்கப்படும் சிறிய அதிர்வுகள் பொதுவானவை என்றாலும், 6.0 ரிக்டர் அளவைத் தாண்டிய நிலநடுக்கங்கள் இங்கு மிகவும் அரிதானவை. இதற்கு முன்பாக, ஆர்மீனியா நகருக்கு அருகே ஏற்பட்ட 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் 1,100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
நிலநடுக்கப் பேரிடரையடுத்து, சமீபத்தில் பதவியேற்ற கொலம்பிய அதிபர் அபெலார்டோ டி லா எஸ்பிரில்லா , சான் ஜோஸ் டெல் பால்மரில் மேற்கொள்ளப்பட்டு வரும் அவசரகால மீட்புப் பணிகளை நேரடியாகத் தனது கட்டுப்பாட்டில் எடுத்துள்ளதாகத் தெரிவித்தார். “பாதிக்கப்பட்ட மக்களே, நீங்கள் தனியாக இல்லை. அரசு உங்களுடன் இருக்கிறது, தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது,” என்று அவர் மக்களுக்கு ஆறுதல் கூறினார்.
இந்தக் கடுமையான நிலநடுக்கம் காரணமாக கொலம்பியாவில் உள்ள ஆறு விமான நிலையங்கள் சேதமடைந்துள்ளன. இதனால் அங்கு விமானப் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து முகமை தெரிவித்துள்ளது.மேற்கு கொலம்பியாவில் உள்ள பெரேரா, மனிசலேஸ், குய்ப்டோ, ஆர்மீனியா, கார்டகோ மற்றும் பியூனவென்ச்சுரா ஆகிய நகரங்களுக்குச் சேவை செய்யும் விமான நிலையங்களே தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு ‘எக்ஸ்’ தளத்தில் உறுதிப்படுத்தியுள்ளது.


