இந்தியாவில் நாள்பட்ட சிறுநீரக நோய்கள் வேகமாக அதிகரித்து வருவது குறித்து கவலை தெரிவித்துள்ள நாடாளுமன்றக் குழு, இதற்கான காரணங்களைக் கண்டறிய நாடு தழுவிய ஆராய்ச்சிகளை மேற்கொள்ளுமாறு மத்திய அமைச்சகங்கள் மற்றும் அறிவியல் நிறுவனங்களுக்குப் பரிந்துரைத்துள்ளது.
மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட 177-வது அறிக்கையில், சிறுநீரக நோய்க்கான அடிப்படைக் காரணங்கள் குறித்து விரிவான ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, வெப்ப அழுத்தம், தொடர்ச்சியான நீர்ச்சத்து குறைபாடு, பூச்சிக்கொல்லிகள் பயன்பாடு, அசுத்தமான குடிநீர் மற்றும் கன உலோகங்களின் பாதிப்பு ஆகியவை குறித்து ஆராயப்பட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
இந்த நாடாளுமன்றக் குழுவின் அறிக்கையில் மொத்தம் 66 முக்கியப் பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, ‘ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திர்’ மையங்களில் சிறுநீரக நோயாளிகளுக்கு இலவச டயாலிசிஸ் வசதி ஏற்படுத்தித் தரப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆயுர்வேதம், யோகா, ஹோமியோபதி போன்ற மாற்று மருத்துவ முறைகள் (ஆயுஷ்) மூலம் சிறுநீரக நோயைத் தடுப்பதற்கும், அகில இந்திய ஆயுர்வேத நிறுவனங்கள் இது குறித்த ஆழமான ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்கும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி, அதிக வெயிலில் வேலை செய்யும் விவசாயத் தொழிலாளர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள் மற்றும் ஆலைத் தொழிலாளர்களுக்குத் தனியாகச் சிறுநீரக சுகாதாரத் திட்டம் தொடங்கப்பட வேண்டும் என்றும், அவர்களுக்குப் போதுமான நிழல், குடிநீர் வசதி மற்றும் அவ்வப்போது மருத்துவப் பரிசோதனைகள் போன்றவற்றை உறுதி செய்ய வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
சுகாதார மற்றும் குடும்ப நலத்துறைச் செயலர் அளித்த தரவுகளின்படி, 2017-ஆம் ஆண்டு நிலவரப்படி உலகளாவிய சிறுநீரக நோய்த் சுமையில் இந்தியாவும் சீனாவும் மட்டுமே மூன்றில் ஒரு பங்கைக் கொண்டுள்ளன. இந்தியாவில் மட்டும் சுமார் 115 மில்லியன் பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். 15 வயதுக்கு மேற்பட்டோரிடையே சிறுநீரக நோய் பாதிப்பு கணிசமாக அதிகரித்துள்ளது; அதாவது, 2011-2017 காலகட்டத்தில் 11.12 சதவீதமாக இருந்த பாதிப்பு, 2018-2023 காலகட்டத்தில் 16.38 சதவீதமாக உயர்ந்துள்ளது. நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தம் ஆகியவை சிறுநீரக நோய்க்கான முக்கியக் காரணங்களாக இருந்தாலும், தற்போது விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் சுற்றுச்சூழல் அபாயங்களுக்கு உள்ளாகும் மக்களிடையே காரணமறியப்படாத சிறுநீரக நோய் அதிகரித்து வருவது மிகுந்த கவலையளிப்பதாகக் குழு சுட்டிக்காட்டியுள்ளது.
கிராமப்புறங்கள், பழங்குடியினப் பகுதிகள் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்குச் சிறுநீரக சிறப்பு மருத்துவர்கள், டயாலிசிஸ் மற்றும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மையங்கள் இன்னும் எட்டாக்கனியாகவே உள்ளதாகக் குழு கவலை தெரிவித்துள்ளது. மேலும், இந்தியாவில் மூளைச்சாவு அடைந்தவர்களின் உறுப்பு தானம் விகிதம் உலகளாவிய அளவை விட மிகக் குறைவாகவே உள்ளது. சமூகத்தில் உள்ள தவறான புரிதல்கள், போதிய விழிப்புணர்வின்மை மற்றும் உள்கட்டமைப்பு குறைபாடுகள் போன்றவையே இதற்குக் காரணமாகும். எனவே, உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வை அதிகப்படுத்தவும், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான நடைமுறைகளை எளிமையாக்கவும் குழு பரிந்துரைத்துள்ளது. இந்த முன்னெடுப்புகள், இந்தியாவில் சிறுநீரக நோயை அணுகும் முறையில் ஒரு முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.


