இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க கோமியத்தை ரூ.10க்கு கொள்முதல் செய்யும் திட்டத்தை உத்தரப் பிரதேச அரசு அறிமுகம் செய்துள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் உள்ள புலந்த்ஷாஹர் மாவட்டத்தில் விவசாயிகளிடம் இருந்து கோமியம் சேகரிக்கும் முன்னோடித் திட்டத்தை யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு தொடங்கியுள்ளது. விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பது, பெண்களுக்கு கூடுதல் வருவாய் ஈட்டும் வாய்ப்பை உருவாக்குவது மற்றும் பால் தராத பசுக்களையும் தொடர்ந்து பராமரிக்க உதவுவது ஆகியவை இத்திட்டத்தின் நோக்கமாகும்.
இங்கு சேகரிக்கப்படும் கோமியம் விவசாயப் பணிகளுக்கான மூலப்பொருளாகப் பயன்படுத்தப்படும் என்றும், இது ரசாயன உரங்களுக்கு சிறந்த மாற்றாக அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முன்னோடித் திட்டம் வெற்றியடைந்தால், மாநிலம் முழுவதும் இதற்கான முறையான கொள்கை உருவாக்கப்பட்டு விரிவுபடுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சியானா தாலுகாவில் உள்ள நர்சாய்னா கிராமத்தில் டாக்டர் பிரவீன் தலைமையிலான உழவர் உற்பத்தியாளர் அமைப்பு மூலம் புலந்த்ஷாஹரில் உள்ள 15 கிராமங்களில் இந்த முன்னோடித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது, தினமும் சுமார் 500 லிட்டர் கோமியம் சேகரிக்கப்பட்டு வருவதுடன், எதிர்காலத்தில் இதன் கொள்முதல் விலையை லிட்டருக்கு 20 ரூபாயாக உயர்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. கோமியத்தை சேமிப்பதற்காக கிராமங்களில் 200 லிட்டர் கொள்ளளவு கொண்ட தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த திட்டத்தில் கிராமப்புற பெண்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். கிராமங்களில் கோமியம் சேகரிக்க உதவும் பெண்களுக்கு லிட்டருக்கு 2 ரூபாய் கமிஷனாக வழங்கப்படுகிறது. இது அவர்களுக்கு ஒரு புதிய கூடுதல் வருமானத்தை உருவாக்கியுள்ளது. சுமார் 300 பெண்களின் ஒத்துழைப்புடன் தொடங்கப்பட்ட இந்த முயற்சியில், அவர்கள் அனைவரும் பங்குதாரர்களாக ஆக்கப்பட்டுள்ளனர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த கோமியம் கொள்முதல் திட்டத்தை ஒரு “ஊழல்” என்று எதிர்க்கட்சியான சமாஜ்வாடி கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது. தேர்தல் நிதி திரட்டுவதற்காகவே பாஜக இந்த ஊழலை அரங்கேற்றுவதாக அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் முகமது ஆசம் கான் குற்றம் சாட்டியுள்ளார். உ.பி மாநிலத்தில் பசு காப்பகங்களோ அல்லது அங்குள்ள பசுக்களோ பாதுகாப்பாக இல்லை என்றும், இந்தத் திட்டத்தால் எந்தவொரு வளர்ச்சியும் ஏற்படப் போவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
சமாஜ்வாடி கட்சியின் இந்த விமர்சனத்திற்கு பாஜக செய்தித் தொடர்பாளர் ஹீரோ பாஜ்பாய் பதிலடி கொடுத்துள்ளார். சமாஜ்வாடி கட்சி ஒவ்வொரு வளர்ச்சித் திட்டத்திலும் குறை காண்கிறது என்று அவர் தெரிவித்தார். “சமாஜ்வாடி கட்சி எந்த சமூகத்தினரின் அரசியலை முன்னிறுத்துகிறதோ, அதே சமூகத்திற்கு இத்திட்டத்தின் மூலம் கிடைக்கும் பலன்களைப் பார்த்து அவர்கள் மகிழ்ச்சியடையவில்லை” என்று அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.


