மார்பகப் புற்றுநோய் என்றாலே மார்பகங்களில் தோன்றும் கட்டிகள் அல்லது தோற்ற மாற்றங்கள் மட்டுமே அறிகுறிகள் என பெரும்பாலோர் கருதி வரும் நிலையில், தொடர்ச்சியான முதுகுவலியும் அதன் அறிகுறியாக இருக்கலாம் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் சமூக ஊடகங்களில் கவனம் ஈர்த்த 27 வயது இளம்பெண் ஒருவரின் மருத்துவப் பின்னணி பலரையும் உறைய வைத்துள்ளது. ஒரு மாதத்திற்கும் மேலாக நீடித்த கடுமையான முதுகு வலியால் அவதிப்பட்டு வந்த அந்தப் பெண்ணை பரிசோதித்த போது, அவருக்கு நான்காம் கட்ட மார்பகப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மார்பகப் பகுதியில் உருவான புற்றுநோய் செல்கள், அவரது முதுகுத் தண்டுவடம் மற்றும் எலும்புப் பகுதிகளுக்கு பரவியதே இத்தகைய கடுமையான முதுகுவலிக்கு காரணம் என மருத்துவர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
பொதுவாக இளம் பெண்களிடம் காணப்படும் முதுகுவலிக்கு தவறான முறையில் அமர்வது, அதிகப்படியான வேலைப்பளு அல்லது சாதாரண தசைப்பிடிப்பு போன்றவைதான் காரணமாக அமைகின்றன. இருப்பினும், பல வாரங்களாக தொடர்ந்து நீடிக்கும் வலி, போதுமான ஓய்வு எடுத்த பின்னரும் குறையாத வலி மற்றும் குறிப்பாக இரவில் தூக்கத்தை கெடுக்கும் வகையிலான கடுமையான முதுகுவலி போன்றவை இருந்தால், அதனை சாதாரணமான ஒன்றாக கருதி அலட்சியப்படுத்தக் கூடாது என எச்சரிக்கப்படுகிறது.
எனவே, பெண்கள் அனைவரும் மாதம் ஒருமுறை சுயமாக மார்பகப் பரிசோதனை செய்துகொண்டு அதில் தோன்றும் மாற்றங்களைக் கவனிக்க வேண்டியது அவசியமாகும். அத்துடன், உடலில் எந்தவொரு பகுதியிலும் தொடர்ச்சியான மற்றும் வழக்கத்திற்கு மாறான வலிகள் தென்பட்டால், தாமதிக்காமல் ஆரம்பக் கட்டத்திலேயே மருத்துவரை அணுகிப் பரிசோதித்துக் கொள்வதே புற்றுநோய் போன்ற பாதிப்புகளில் இருந்து உயிரைப் பாதுகாத்துக் கொள்ள உதவும் என மருத்துவ வல்லுநர்கள் வலியுறுத்துகின்றனர்.



