சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் மூன்று முதல் நான்கு மடங்கு வரை சொத்து வரி அதிகமாக வந்துள்ளதால் மக்கள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். சென்னை அண்ணா நகரில் கடந்த ஆண்டு ரூ. 5,000 சொத்து வரி செலுத்தப்பட்ட கட்டடத்துக்கு, இந்தாண்டு ரூ.28,000 சொத்து வரி வந்துள்ளதால் பாதிக்கப்பட்ட கட்டிட்ட உரிமையாளர் ஒருவர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார். இது போல பலருக்கு கடந்த ஆண்டு விதிக்கப்பட்ட சொத்து வரியை விட கூடுதலாக 3 முதல் 4 மடங்கு சொத்துவரி நோட்டீஸ் வந்துள்ளது.
எவ்வித காரணமும் இன்றி, முறையான முன்னறிவிப்பும் இன்றி திடீரென சொத்து வரியைப் பல மடங்கு உயர்த்தியிருப்பதை ஏற்க முடியாது என்று பாதிக்கப்பட்ட மக்கள் சோஷியல் மீடியாக்களிலும், சென்னை மாநகராட்சியின் அதிகாரபூர்வ சோஷியல் மீடியா அக்கவுண்ட்டிலும் கருத்துக்களை பதிவிடுவதன் மூலமாக தங்களின் அதிர்ச்சி மற்றும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். இதற்கு எதிர்க்கட்சி தலைவர்களும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்தநிலையில், சொத்துவரி திருத்திய மதிப்பீடு தொடர்பாகப் பொதுமக்கள் எழுப்பிய கோரிக்கைகள் கவனமாக ஆய்வு செய்த பிறகு, வரி மாற்றியமைப்பை உடனடியாகத் நிறுத்தி வைக்க பெருநகர சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், ‘குறைவாக மதிப்பீடு செய்யப்பட்டவை’ (Under Assessed) எனக் கண்டறியப்பட்ட சில சொத்துகளுக்கான சொத்துவரியை மாற்றி அமைக்கும் நடவடிக்கையை மாநகராட்சி மேற்கொண்டிருந்தது. இந்த வரி மாற்றியமைப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, கடந்த சில நாட்களாகப் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.
இந்தநிலையில், பொதுமக்கள் எழுப்பிய கோரிக்கைகள் மற்றும் மனுக்களை கவனமாக ஆய்வு செய்த பிறகு, சொத்துவரி மாற்றியமைக்கும் நடவடிக்கையை உடனடியாக நிறுத்தி வைக்க பெருநகர சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதன்படி, சொத்துவரித் தொகையானது மாற்றியமைக்கப்படுவதற்கு முன்பு நடைமுறையில் இருந்த பழைய அளவிற்கே மீண்டும் மாற்றப்படும்.
மாற்றியமைக்கப்பட்ட புதிய வரித்தொகையை ஏற்கனவே செலுத்திய உரிமையாளர்களுக்கு, அவர்கள் செலுத்திய கூடுதல் தொகை அடுத்தடுத்த அரையாண்டுகளுக்கான முன்பண வரியாக ஈடு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



