ஐபோன் பயனர்களை இலக்காக கொண்டு ‘மெர்சனரி ஸ்பைவேர்’ (Mercenary Spyware) எனப்படும் அதிநவீன உளவு மென்பொருள் தாக்குதல்கள் நடத்தப்படலாம் என 110 நாடுகளைச் சேர்ந்த தனது பயனர்களுக்கு ஆப்பிள் நிறுவனம் அவசர எச்சரிக்கை அறிவிப்பை அனுப்பியுள்ளது.
வழக்கமான சைபர் குற்றங்களை காட்டிலும் இந்த வகை ‘மெர்சனரி ஸ்பைவேர்’ தாக்குதல்கள் மிகவும் ஆபத்தானவை மற்றும் அதிநவீன தொழில்நுட்ப உத்திகளைக் கொண்டவை ஆகும். குறிப்பிட்ட நபர்கள், பத்திரிகையாளர்கள், அரசியல்வாதிகள் மற்றும் முக்கியப் பொறுப்பில் உள்ளவர்களின் சாதனங்களை ஊடுருவி உளவு பார்ப்பதற்காகக் கோடிக்கணக்கான ரூபாய் செலவழிக்கப்பட்டு இந்தத் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன.
இந்த உளவுத் தாக்குதல்கள் மிகக் குறுகிய காலத்திற்கு மட்டுமே இயக்கப்படுவதால், இவற்றைக் கண்டறிவது மிகவும் கடினம் என ஆப்பிள் தெரிவித்துள்ளது. இருப்பினும், தங்கள் கண்காணிப்பு அமைப்பின் மூலம் ஆபத்து இருப்பதாகக் கண்டறியப்பட்ட பயனர்களின் ஆப்பிள் கணக்கு மற்றும் சாதனத்தின் திரையில் இந்த அவசர எச்சரிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
இத்தகைய எச்சரிக்கை அறிவிப்பைப் பெறும் பயனர்கள், உடனடியாக தங்கள் சாதனங்களில் ‘லாக்டவுன் மோட்’ (Lockdown Mode) வசதியை இயக்குமாறும், புதிய பாதுகாப்புப் புதுப்பிப்புகளைப் (Software Updates) பதிவிறக்கம் செய்யுமாறும் ஆப்பிள் கேட்டுக்கொண்டுள்ளது.



