மேற்கு வங்க சட்டப்பேரவையின் முன்னாள் துணை சபாநாயகரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான டாக்டர் ஆசிஷ் பானர்ஜி, பிர்பூமின் ராம்பூர்ஹாட் பகுதியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று சடலமாக மீட்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது உடலுக்கு அருகே கைப்பற்றப்பட்ட தற்கொலை கடிதம் தற்போது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
அவரது தற்கொலை கடிதத்தில் கூறியுள்ளதாவது, தனது மாணவர் பருவத்திலிருந்தே தான் அரசியலில் ஈடுபட்டு வருவதாகவும், ஆனால் இப்போது உணர்ந்து பார்க்கும்போது அரசியலுக்கு வந்தது தான் செய்த மிகப்பெரிய தவறு என்றும் உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், தனது குடும்பத்தினர் யாரும் அரசியலில் ஈடுபட வேண்டாம் என்றும், தங்களது சொந்த தொழில்களில் மட்டுமே கவனம் செலுத்துமாறும் அறிவுறுத்தியுள்ளார்.
அதேபோல தாராபீத்-ராம்பூர்ஹாட் மேம்பாட்டு ஆணையத்தின் (TRDA) பெயரைக் குறிப்பிட்டுள்ள அவர், தான் எந்த ஒரு வேலைக்காகவும் யாரிடமிருந்தும் ஒரு பைசா கூட லஞ்சமாகப் பெறவில்லை என்றும், டெண்டர் குழுவிலோ அல்லது நிதி தொடர்பான முடிவுகளிலோ தனக்கு எந்த அதிகாரமும் இல்லை என்றும் விளக்கமளித்துள்ளார். பொதுக்கூட்டங்களில் பங்கேற்பதைத் தவிர தனக்கு வேறு பொறுப்புகள் எதுவும் இருக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தன்னை அசிங்கப்படுத்தவும் அவமானப்படுத்தவும் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக வேதனையுடன் குறிப்பிட்டுள்ள அவர், கட்சிக்குள்ளேயே நடந்த சில தவறுகளை தன்னால் ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை, எதிர்த்து கேட்கவும் முடியவில்லை என்று தெரிவித்துள்ளார். இருப்பினும், இந்த துயர முடிவுக்கு தான் மட்டுமே பொறுப்பு என்றும், யாரையும் பழிசொல்ல விரும்பவில்லை என்றும் கூறி யாருடைய பெயரையும் கடிதத்தில் அவர் குறிப்பிடவில்லை.
ஆசிஷ் பானர்ஜியின் மறைவை தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடுமையான வார்த்தை போர் வெடித்துள்ளது. திரிணாமுல் காங்கிரஸின் தேசிய பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜி மற்றும் கட்சித் தலைமை, பாஜகவின் பொய் பிரச்சாரமும் அவதூறுகளுமே பானர்ஜியின் மன உளைச்சலுக்கும் இந்த முடிவிற்கும் காரணம் எனக் குற்றம் சாட்டியுள்ளனர். ஆனால் பாஜக தலைவர்கள் இக்குற்றச்சாட்டை மறுத்துள்ளதுடன், காவல் துறை மூலமாக இதன் பின்னணியில் உள்ள உண்மைகளை கண்டறிய நியாயமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.



