தமிழக முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் ‘சிக்மா’ திரைப்படம் வரும் அக்டோபர் 2ம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2023ம் ஆண்டு லைகா தயாரிப்பில் முதல்வர் விஜய்யின் மகனான ஜேசன் படம் இயக்குகிறார் என அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது. படப்பிடிப்பும் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நிறைவடைந்தது. படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பும் பெற்றது.
கதாநாயகனாக சந்தீப் கிஷன் நடிப்பில், லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இந்தப் படம் ஜூலை 31-ஆம் தேதியே உலகெங்கும் வெளியாகும் எனப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இருப்பினும், முதலமைச்சர் விஜய்யின் கடைசி படமான ‘ஜன நாயகன்’ படத்தின் வெளியீடு காரணமாக, ‘சிக்மா’ படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டதாகச் செய்திகள் வெளியாகின. ‘ஜன நாயகன்’ படத்துடன் பாக்ஸ் ஆபிஸில் மோதுவதைத் தவிர்க்கும் வகையில், ‘சிக்மா’ படத்தின் வெளியீடு ஆகஸ்ட் மாதத்திற்கு மாற்றப்பட்டதாக முதலில் கூறப்பட்டது. பின்னர், திரையரங்குகளில் சரியான ரிலீஸ் தேதியைப் பிடிப்பதற்காக செப்டம்பர் 18-ஆம் தேதிக்கு
படம் தள்ளிவைக்கப்பட்டதாகப் புதிய தகவல்கள் பரவின.
இந்நிலையில், ‘சிக்மா’ திரைப்படம் காந்தி ஜெயந்தியான அக்டோபர் 2-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் சந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா, ராஜு சுந்தரம், சம்பத் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
.



