பாகிஸ்தான் அல்ல, இந்தியாவின் மெயின் எதிரியே சீனா தான்!. முன்னாள் ராணுவ தளபதி நரவனே அதிரடி

பாகிஸ்தானிடமிருந்து தொடர்ந்து பயங்கரவாத அச்சுறுத்தல்கள் நிலவினாலும், நீண்ட காலத்தில் பல துறைகளிலும் இந்தியாவின் முதன்மைப் போட்டியாளராக சீனா இருக்கப் போகிறது என்று இந்திய ராணுவத்தின் முன்னாள் தலைமைத் தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவனே தெரிவித்துள்ளார்.


மகாராஷ்டிராவின் புனே நகரில் ரூபா பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தின் மூலம் வெளியிடப்பட்ட தனது புதிய புத்தகமான ‘தி கியூரியஸ் அண்ட் தி கிளாசிஃபைட்: அன்வெர்த்திங் மிலிட்டரி மித்ஸ் அண்ட் மிஸ்டரீஸ்’ (The Curious and the Classified: Unearthing Military Myths and Mysteries) என்ற புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனைக் குறிப்பிட்டார். 2020 ஆம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கு மோதலின் போது ராணுவத் தளபதியாக பதவி வகித்தவர் நரவனே என்பது குறிப்பிடத்தக்கது.

நாம் பாகிஸ்தானுடன் பெரிய போர்களை நடத்தியுள்ளோம்; பயங்கரவாதத்திற்கு அவர்கள் தொடர்ந்து அளிக்கும் ஆதரவு காரணமாக நமது கவனம் மேற்கு எல்லைகளின் மீது உள்ளது. ஆனால், நீண்ட கால அடிப்படையிலும் வரும் ஆண்டுகளிலும் சீனாவே நமது முக்கிய போட்டியாளராக இருக்கப்போகிறது என்பதில் நாம் தெளிவாக இருக்கிறோம் என்று நான் நினைக்கிறேன். நான் வேண்டுமென்றே ‘எதிரி’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தாமல் ‘போட்டியாளர்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறேன் என்றும் அவர் கூறினார்.

அரசியல், பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் ராணுவ விவகாரங்கள் என பல துறைகளிலும் இந்தியாவும் சீனாவும் போட்டியிடும் என்று குறிப்பிட்ட அவர், அதேசமயம் இரு தரப்பும் பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திர வழிகள் மூலமாகவே நீண்ட காலத் தீர்வு காண வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

பேச்சுவார்த்தைகள் பலனளிக்காத ஒரு தருணம் வரக்கூடும் என்பதால், எத்தகைய சவால்களையும் எதிர்கொள்ள இந்தியா ராணுவ ரீதியாக எப்போதுமே தயாராக இருக்க வேண்டும் என்றார். பலமான தடுப்பு சக்தி மூலமாகவே எவரும் பலத்தைப் பிரயோகிப்பதைத் தடுக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அண்டை நாடுகளில் நிலவும் குழப்பங்கள் இந்தியாவுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று எச்சரித்த நரவனே, போதைப்பொருள் போன்ற சட்டவிரோதப் பொருட்கள் ஊடுருவாமல் இருக்கவும், நாட்டின் அமைதிக்கும் அண்டை நாடுகளின் ஸ்திரத்தன்மைக்கு இந்தியா உதவ வேண்டும் என்றார். மேலும், நீங்கள் அமைதியை விரும்பினால், போருக்குத் தயாராக இருங்கள் என்ற பழமொழியையும் அவர் சுட்டிக்காட்டினார்.

1newsnationuser5

Next Post

பாலியல் புகாரை வாபஸ் பெற மிரட்டல்? தவெக பெண் நிர்வாகி ஐ.ஜி.யிடம் பரபரப்பு புகார்!

Fri Aug 21 , 2026
தனக்கு நேர்ந்ததாக கூறப்படும் பாலியல் தொல்லை குறித்து காவல்துறையில் புகார் அளித்த நிலையில், அதனை திரும்பப் பெறுமாறு மிரட்டல் விடுக்கப்படுவதாக தமிழக வெற்றிக் கழக பெண் நிர்வாகி ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார். தனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக கூறி, தென்மண்டல ஐ.ஜி.யிடம் அவர் நேரடியாக புகார் அளித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 35 வயது பெண் ஒருவர், தவெக செயற்குழு உறுப்பினராக உள்ளார். கட்சியில் கூடுதல் பொறுப்பு பெற்றுத் தருவதாக கூறி, […]
woman harrasment

You May Like