நாட்டின் சிறந்த பள்ளி ஆசிரியர்களைக் கவுரவிக்கும் வகையில் ஆண்டுதோறும் செப்டம்பர் 5 ஆம் தேதி ஆசிரியர் தினத்தன்று தேசிய அளவிலான விழா கல்வி அமைச்சகத்தால் நடத்தப்படுகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட 48 பள்ளி ஆசிரியர்களுக்குக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு செப்டம்பர் 5 அன்று தேசிய ஆசிரியர் விருதுகளை வழங்கிச் சிறப்பிக்கவுள்ளதாக கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பள்ளிக் கல்வி மற்றும் மாணவர்களின் வளர்ச்சிக்குச் சிறப்பான பங்களிப்பை வழங்கிய ஆசிரியர்களைக் கண்டறியும் நோக்கில், மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவிலான மூன்று கட்டத் தேர்வு முறை மூலம் இந்த விருதுக்குரியவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை சார்பில் இந்தத் தேர்வு செயல்முறை மேற்கொள்ளப்பட்டது.
தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த 48 ஆசிரியர்கள் 27 மாநிலங்கள், 7 யூனியன் பிரதேசங்கள் மற்றும் மத்திய அரசின் கீழ் இயங்கும் 6 அமைப்புகளைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். மொத்த விருது பெற்றவர்களில் 26 பேர் ஆண்களும், 22 பேர் பெண்களும் ஆவர். ஆசிரியர் தின விழாவின் போது, ஒவ்வொரு விருது பெற்ற ஆசிரியரின் முன்மாதிரியான பணிகள் மற்றும் சாதனைகளை விளக்கும் குறும்படங்களும் திரையிடப்பட உள்ளன.
இந்தப் பட்டியலில் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள், அரசு உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் அரசு இடைநிலைக் கல்லூரிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் இடம்பெற்றுள்ளனர். அவர்களில், சண்டிகரில் உள்ள அரசு மாதிரி உயர்நிலைப் பள்ளி, மிசோரம் மாநிலத்தில் உள்ள அரசு எலக்ட்ரிக் வெங் உயர்நிலைப் பள்ளி, கர்நாடகாவில் உள்ள சமதகுருவில் உள்ள அரசு உயர் தொடக்கப் பள்ளி, தமிழ்நாட்டில் உள்ள புளியம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மற்றும் மேற்கு வங்கத்தின் நயாகராமில் உள்ள அரசு மாதிரிப் பள்ளி ஆகியவற்றின் ஆசிரியர்களும் அடங்குவர்.
இந்தியாவில் உள்ள சிறந்த ஆசிரியர்களின் தனித்துவமான பங்களிப்பைக் கொண்டாடுவதும், தங்களது அர்ப்பணிப்பு மூலம் மாணவர்களின் வாழ்க்கையை வளப்படுத்திய ஆசிரியர்களைக் கவுரவிப்பதும் இந்த விருதின் முக்கிய நோக்கமாகும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.



