திமுக ஆட்சிக் காலத்தில் பள்ளிக்கல்வித்துறையில் முறைகேடுகள் தலைவிரித்தாடியதாகவும், கல்வி நிறுவனம் நடத்தி வரும் தன்னிடமே கட்டாயப்படுத்தி லஞ்சம் பெறப்பட்டதாகவும் நிதி அமைச்சர் மரிய வில்சன் பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
சட்டமன்றத்தில் உயர்கல்வி மற்றும் பள்ளிக்கல்வியின் தரம் குறித்துப் பேசிய அவர், வெறும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் எண்ணிக்கையை மட்டும் உயர்த்துவது பெருமையாகாது என்றும், கல்வியின் தரமே மிக முக்கியமானது என்றும் குறிப்பிட்டார். முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் இதுகுறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாக தெரிவித்த அவர், கடந்த 30 முதல் 40 ஆண்டுகளாக அரசு கலை மற்றும் பொறியியல் கல்லூரிகளுக்கு ஒரு அடிப்படை ஐஎஸ்ஓ (ISO) தரச்சான்றிதழ்கூட பெறப்படாமல் இயங்கி வந்துள்ளதைச் சுட்டிக்காட்டினார். எந்தவித முயற்சியும் எடுக்காமல் கல்லூரிகளை நடத்தியதால்தான் தரமின்மை நிலவியதாகவும், மாறாகத் தனியார் கல்லூரிகள் தரத்தை உயர்த்தியதால் அங்கு வேலைவாய்ப்புகள் அதிகரித்துள்ளதாகவும் அவர் விளக்கினார்.
திமுக ஆட்சியில் பல இடங்களில் கட்டாயப்படுத்தி லஞ்சம் வசூலிக்கப்பட்டதற்கு தானே மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்ட நேரடி சாட்சி என்று பகிரங்கமாக குற்றம்சாட்டினார். எதிர்க்கட்சியினர் தொடர்ந்து ஆவண ஆதாரங்களையும் சாட்சிகளையும் கேட்டு வரும் நிலையில், இந்த விவகாரத்தில் தானே முதன்மைச் சாட்சியாக நிற்பதாகக் கூறினார். முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் தற்போது அவையில் இல்லை என்றாலும், 3 நாட்களாக நீடித்து வரும் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கவே இதனைப் பதிவு செய்வதாக தெரிவித்தார்.
மேலும், தன் மீதான குற்றச்சாட்டுக்காக அவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தாலும் அதைச் சட்டப்படி எதிர்கொள்ள தயாராக இருப்பதாக தெரிவித்த அவர், சென்னை தி.நகரில் எந்த இடத்தில் வைத்து, எவ்வளவு தொகை லஞ்சமாக கைமாறியது என்பதையும், சிறுபான்மை கல்வி நிறுவனத்திற்கு எவ்வளவு தொகை பெறப்பட்டது என்பதையும் தன்னால் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடியும் என தெரிவித்தார். மரிய வில்சனின் இந்த அதிரடி குற்றச்சாட்டை தொடர்ந்து, திமுக உறுப்பினர்கள் அவையில் எழுந்து நின்று கடும் அமளியில் ஈடுபட்டனர்.
Read More : அற்ப அரசியலுக்காக பரந்தூர் ஏர்போர்ட் திட்டத்தை கைவிடுவதா..? முதல்வர் விஜய்க்கு ஸ்டாலின் கடும் கண்டனம்..!!



