தமிழ்நாடு – கர்நாடகா இடையே பல தசாப்தங்களாக தொடர்ந்து வரும் காவிரி நதிநீர் பிரச்சனையால், நடப்பாண்டிலும் டெல்டா மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரம் மிகக் கடுமையான அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. வழக்கமாக ஜூன் 12-ஆம் தேதி குறுவை சாகுபடிக்காகவும், ஆகஸ்ட் 1 முதல் டிசம்பர் 15 வரை 137 நாட்களுக்குக் கால்வாய் பாசனத்திற்காகவும் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால், கர்நாடக அணைகளில் இருந்து உரிய நீர் பங்கு வழங்கப்படாததால் நீர் பற்றாக்குறை ஏற்பட்டு, குறித்த காலத்தில் தண்ணீர் திறக்க முடியாத நிலை உருவானது.
இதற்கிடையே, கருகும் குறுவை பயிர்களைக் காப்பாற்ற வினாடிக்கு 3,500 கன அடி வீதம் காவிரியில் உடனடியாக தண்ணீர் திறந்துவிடுமாறு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்ட போதிலும், கர்நாடக அரசு அதனை திட்டவட்டமாக நிராகரித்தது. இதனைத் தொடர்ந்து, தங்களுக்குரிய நீர் பங்கை உடனடியாக விடுவிக்க கர்நாடகத்திற்கு உத்தரவிடக் கோரி தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்தது.
நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, விகிதாச்சாரப்படியான நீரைப் பெறுவதில் தமிழகம் தொடர்ந்து வஞ்சிக்கப்படுவதாக தமிழக தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். இதனைத் தொடர்ந்து, உரிய நீரை வழங்குவதில் கர்நாடகாவிற்கு என்ன தயக்கம் என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், விகிதாச்சார அடிப்படையில் நீர் திறப்பது தொடர்பாகக் காவிரி மேலாண்மை ஆணையத்தில் முறையிடுமாறு தமிழகத்திற்கு உத்தரவிட்டு, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஆகஸ்ட் 31ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
1892 மற்றும் 1924ஆம் ஆண்டு அப்போதைய சென்னை மாகாணம் மற்றும் மைசூர் சமஸ்தானத்திற்கு இடையே போடப்பட்ட ஒப்பந்தக் காலத்தில் இருந்தே இப்பிரச்சனை நீடித்து வருகிறது. உச்சநீதிமன்ற உத்தரவின்படி அமைக்கப்பட்ட காவிரி நடுவர் மன்றம் தமிழகத்திற்கு ஆண்டுக்கு 205 டி.எம்.சி நீர் வழங்க இடைக்கால தீர்ப்பு வழங்கியபோதிலும், 1995 வறட்சியின் போது உச்சநீதிமன்றமே உத்தரவிட்டும் கர்நாடகம் தண்ணீர் திறக்கவில்லை. பின்னர் அப்போதைய பிரதமர் நரசிம்மராவ் தலையிட்டு நடத்திய பேச்சுவார்த்தையின் பலனாக, நடுவர் மன்றம் உத்தரவிட்ட 11 டி.எம்.சி-க்கு பதிலாக வெறும் 6 டி.எம்.சி மட்டுமே திறக்கப்பட்டது.
அதேபோல், 2002ஆம் ஆண்டு கடுமையான வறட்சியால் டெல்டா உழவர்கள் எலிக்கறி சாப்பிடும் நிலைக்குத் தள்ளப்பட்டபோதும், பிரதமர் தலைமையிலான ஆணையமும் உச்சநீதிமன்றமும் உத்தரவிட்டும் அப்போதைய கர்நாடக அரசு நீர் திறக்க மறுத்து முரண்டு பிடித்தது; பின்னர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்ட பிறகே தண்ணீர் திறக்கப்பட்டது. கர்நாடகாவில் காங்கிரஸ், பாஜக என மாறி மாறி ஆட்சிகள் அமைந்தாலும், முதல்வர்கள் மாறினாலும் தமிழகத்திற்கு உரிய காவிரி நீரைத் திறந்துவிடக் கூடாது என்பதில் அனைத்துக் கட்சிகளும் ஒரே நிலைப்பாட்டை கொண்டு தொடர்ந்து தமிழக உரிமைகளைப் பறித்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.



