கடந்த 2025ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழகம் முழுவதும் சேவல் சண்டைகளுக்கு தடை விதித்து டிஜிபி சார்பில் சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. இந்த சுற்றறிக்கையை முழுமையாக ரத்து செய்யக் கோரியும், ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் பாரம்பரியமாக நடைபெறும் கோயில் திருவிழாக்களின் போது சேவல் சண்டை போட்டிகளை நடத்த அனுமதி வழங்கக் கோரியும் ஈரோட்டை சேர்ந்த அருண்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி வி. லட்சுமிநாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிடுகையில், “மிருகவதை தடுப்புச் சட்டம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம், அதன் மதுரை கிளை ஆகியவை பிறப்பித்த முந்தைய பல்வேறு தீர்ப்புகளின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றியே டிஜிபி இந்தச் சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளார். மேலும் இது தொடர்பான பொதுநல மனு ஒன்று தலைமை நீதிபதி அமர்வில் நிலுவையில் உள்ளதால் விரிவான விளக்கம் அளிக்கக் கால அவகாசம் தேவை” எனக் கேட்டுக்கொண்டார்.
அரசுத் தரப்பின் இந்த விளக்கத்தை ஏற்க மறுத்த நீதிபதி, காவல்துறை நிர்வாகத்தின் எல்லை மீறிய செயல்பாடுகள் குறித்துத் தனது கடுமையான அதிருப்தியை தெரிவித்தார். “தமிழகத்தில் சேவல் சண்டை நடத்தக் கூடாது என்று தடை உத்தரவு அல்லது சுற்றறிக்கை பிறப்பிக்க டிஜிபிக்கு என்ன சட்டப்பூர்வ அதிகாரம் உள்ளது? சட்டம்-ஒழுங்கைப் பராமரிப்பது உட்படக் காவல்துறையினருக்கு எத்தனையோ முக்கியப் பணிகள் இருக்கும் சூழலில், ஆடு சண்டை எங்கே நடக்கிறது, சேவல் சண்டை எங்கே நடக்கிறது என்பதை மட்டும் தேடித் தேடிக் கண்காணிப்பதுதான் போலீசாரின் முழுநேர வேலையா?” என சரமாரியாகக் கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து, இந்த வழக்கின் முக்கியத்துவம் கருதி காவல்துறை தரப்பில் முறையான விரிவான பதில் மனுவைத் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் செப்டம்பர் 7-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
Read More : நேபாள பெருவெள்ளம் எதிரொலி..!! முன்கூட்டியே உஷாரான சிக்கிம் அரசு..!! பனிப்பாறை ஏரிகளில் சென்சார்..!!



