இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவை தனியார்மயமாக்க வாய்ப்புள்ளதாக வெளியான தகவல்களை அந்நிறுவனம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது முற்றிலும் “அடிப்படை ஆதாரமற்றவை மற்றும் தவறானவை” எனத் தெரிவித்துள்ள இஸ்ரோ, இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டிற்கான முதன்மை நிறுவனமாக இஸ்ரோ தொடர்ந்து செயல்படும் என தெரிவித்துள்ளது.
எக்ஸ் தளத்தில் இது குறித்து விரிவான விளக்கத்தை அளித்துள்ள இஸ்ரோ, விண்வெளித்துறையில் தனியார் துறையின் பங்களிப்பு இஸ்ரோவின் பங்கை குறைப்பதற்காக அல்ல என்றும், மாறாக அடுத்த தலைமுறை விண்வெளித் திட்டங்களில் இஸ்ரோ மேலும் தீவிரமாக கவனம் செலுத்தவே இந்த நடவடிக்கை எனவும் தெளிவுபடுத்தியுள்ளது.
இஸ்ரோவின் எதிர்காலச் செயல்பாடுகள் குறித்து ஊடகங்களில் வெளியான செய்திகள் மற்றும் தனியார்மயமாக்கப்படும் என்ற ஊகங்கள் முற்றிலும் அடிப்படை ஆதாரமற்றவை. இஸ்ரோ தனியார்மயமாக்கப்பட மாட்டாது, அதன் முக்கியத்துவமும் எந்த வகையிலும் குறைக்கப்படாது என அந்நிறுவனம் திட்டவட்டமாகக் கூறியுள்ளது.
வழக்கமாக தயாரிக்கப்படும் ஏவுகணைகள், செயற்கைக்கோள்கள் மற்றும் பிற தொழில்நுட்ப அமைப்புகளின் உற்பத்தியை தகுந்த போட்டி நடைமுறைகள் மூலம் இனி தனியார் தொழில்துறைகள் அல்லது பொதுத்துறை நிறுவனங்கள் (PSUs) பெருமளவில் மேற்கொள்ளும்.
இஸ்ரோவின் முக்கியத்துவம் குறையாது என்றும், இந்தியாவின் விண்வெளித்துறையின் அடித்தளமாக அதுவே தொடரும் என்றும் இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையத்தின் (IN-SPACe) தலைவர் பவன் கோயங்காவும் தெரிவித்துள்ளார்.
ஆகஸ்ட் 21 அன்று நடைபெற்ற ஒரு நிகழ்வில், “இனி வரும் காலங்களில் இஸ்ரோ ஏவுகணைகளைத் தயாரிக்காது” என பவன் கோயங்கா கூறியதாகத் தகவல் வெளியானது. இதன் அடிப்படையில் இஸ்ரோவின் 9 பணியாளர் சங்கங்கள் செப்டம்பர் 4-ஆம் தேதி இஸ்ரோ தலைவர் டாக்டர் வி. நாராயணனுக்குக் கடிதம் எழுதி விளக்கம் கோரியிருந்தன. இதன் தொடர்ச்சியாகவே தற்போது இந்த விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளன.
நியூஸ்பேஸ் இந்தியா லிமிடெட் (NSIL) வணிக ரீதியிலான மேம்பாடுகளுக்கு உதவும். அதே நேரத்தில், 2035-ஆம் ஆண்டுக்குள் ‘பாரதிய அந்தரிக்ஷ் நிலையம்’ (Bharatiya Antariksh Station) அமைப்பது, 2040-ல் நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம், அடுத்த தலைமுறை ஏவுதள அமைப்புகள் மற்றும் தொடர்ச்சியான கோள் ஆய்வுகள் போன்ற இந்தியாவின் எதிர்கால விண்வெளித் திட்டங்களில் இஸ்ரோ தொடர்ந்து மையமாக விளங்கும் என பவன் கோயங்கா தெரிவித்துள்ளார்.



