இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில், ரன்பீர் கபூர் மற்றும் யஷ் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்படும் பிரம்மாண்டமான புராணத் திரைப்படமான ‘ராமாயணம்: பாகம் 1’ (Ramayana: Part 1) குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. உலகளாவிய வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டிருந்தாலும், வெளிநாட்டு ரசிகர்களுக்கு ஒரு நாள் முன்பாகவே இப்படம் திரைக்கு வரவுள்ளது.
ஆஸ்திரேலியாவில் முன்கூட்டியே ரிலீஸ்: தயாரிப்பாளர் நமித் மல்ஹோத்ரா அறிவித்தபடி, இப்படம் இந்தியாவில் நவம்பர் 8-ம் தேதியும், உலகின் பிற பகுதிகளில் நவம்பர் 6-ம் தேதியும் வெளியாகவுள்ளது. ஆனால், படத்தின் உலகளாவிய விநியோகஸ்தரான சோனி பிக்சர்ஸ் (Sony Pictures) வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, ஆஸ்திரேலியாவில் நவம்பர் 5-ம் தேதியே படம் திரைக்கு வரவுள்ளது. இதன் மூலம், உலகிலேயே ரன்பீர் கபூரின் இந்த காவியத் திரைப்படத்தை முதலில் பார்க்கப் போகும் பெருமையை ஆஸ்திரேலியா ரசிகர்கள் பெறுகின்றனர்.
பிரம்மாண்டமான தயாரிப்பு மற்றும் நட்சத்திரப் பட்டாளம்:
இந்திய சினிமாவின் மிகப்பிரமாண்டமான படைப்புகளில் ஒன்றாகக் கருதப்படும் இப்படத்தின் இரண்டு பாகங்களும் சேர்த்து சுமார் ரூ.4,000 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. உலகளாவிய பார்வையாளர்களை கவரும் வகையில் சர்வதேச அளவில் பிரம்மாண்ட திரையிடல் திட்டமிடப்பட்டுள்ளது.
இப்படத்தில் ரன்பீர் கபூர் ஸ்ரீ ராமராகவும், யஷ் ராவணனாகவும் நடிக்கின்றனர். சாய் பல்லவி சீதையாகவும், மற்றும் ரவி துபே, ராகுல்பிரீத் சிங், குனால் கபூர் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். நவம்பர் மாதம் வெளியாகவுள்ள இப்படம் குறித்த எதிர்பார்ப்பு தற்போதே சினிமா வட்டாரத்தில் உச்சத்தை தொட்டுள்ளது.



