சென்னை திருவொற்றியூர் மேற்கு மாட வீதியைச் சேர்ந்த பிரதீப் ராஜ் (26) என்ற இளைஞர், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக காவல்துறையிடம் குடும்பத்துடன் நேரில் சென்று புகாரளித்த அடுத்த நாளே, மர்ம கும்பலால் ஓட ஓட விரட்டி கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
கொலை செய்யப்படுவதற்கு முன்பாக, திருவொற்றியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துவிட்டு செய்தியாளர்களைச் சந்தித்த பிரதீப் ராஜ், காவல்துறையினர் மீதும் கடன் கொடுத்தவர்கள் மீதும் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். தனது தாய் மற்றவர்களுக்கு வாங்கிக் கொடுத்த பண விவகாரத்தில், நவநீதம் என்பவரது தரப்பினர் ரவுடிகளை ஏவி தங்களை மிரட்டுவதாகவும், ரூ.18 லட்சம் கடனுக்கு கந்துவட்டியாக ரூ.30 முதல் ரூ.40 வரை கேட்டு அச்சுறுத்துவதாகவும் அவர் வேதனை தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக காவல் ஆணையர் அலுவலகம் வரை புகார் அளித்தும் தங்களுக்கு எந்தப் பாதுகாப்பும் கிடைக்கவில்லை எனக் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், திருவொற்றியூர் காவல் ஆய்வாளரே தன்னை நேரடியாக மிரட்டியதாகவும், “சுட்டுவிடுவேன், பொய் வழக்கில் கைது செய்வேன்” என அச்சுறுத்தியதோடு, குறிப்பிட்ட நபர்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டு தன் மீது தாக்குதல் நடத்தியதாகவும் பகீர் குற்றச்சாட்டை பிரதீப் ராஜ் பதிவு செய்திருந்தார். சாமானிய மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாகவும் அவர் ஆதங்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், தன் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக வெளிப்படையாகப் பேட்டியளித்த ஒரே நாளில் பிரதீப் ராஜ் நடுரோட்டில் படுகொலை செய்யப்பட்டிருப்பது காவல்துறையின் மெத்தனப் போக்கையும், சட்டம் ஒழுங்கு நிலையையும் கேள்விக்குறியாக்கியுள்ளது.
இச்சம்பம் குறித்து தனிப்படை அமைத்து குற்றவாளிகளை போலீசார் தேடி வந்த நிலையில் மாதவரம் பகுதியில் பதுங்கியிருந்த நவீன், ஹரி கிருஷ்ணன், ஜபார் , லோகேஷ் ஆகிய 4 பேரை கைது செய்தனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.



