ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள பிடாரிசேரி பகுதியில், லாரி மோதியதில் சாலையில் சென்று கொண்டிருந்த 50 செம்மறி ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தன.
அருப்புக்கோட்டை அருகே உள்ள கல்லூரணியைச் சேர்ந்த கேசவன் என்பவர், தனக்குச் சொந்தமான செம்மறி ஆடுகளைத் தனது சொந்தக் கிராமத்திற்கு ஓட்டிச் சென்று கொண்டிருந்தார். அப்போது பார்த்திபனூரில் இருந்து அருப்புக்கோட்டை நோக்கி கருவேல மரத்தூள் ஏற்றிச் சென்ற லாரி, ஓட்டுநரின் தூக்கக் கலக்கம் காரணமாகக் கட்டுப்பாட்டை இழந்து ஆட்டு மந்தையின் மீது வேகமாக மோதியது.
இந்தக் கோர விபத்தில் சுமார் ரூ.5 லட்சம் மதிப்புடைய 50 செம்மறி ஆடுகளும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன. இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த பார்த்திபனூர் காவல் துறையினர், விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் அர்ஜுனனை உடனடியாகக் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



