பிக்பாஸ் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி பேசிய சில வார்த்தைகள் தற்போது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளன. போட்டியாளர்களின் செயல்பாடுகள் குறித்து அவர் நடத்திய உரையாடலில், தலைமைப் பொறுப்பு மற்றும் கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவது குறித்து அவர் முன்வைத்த கருத்துகள் அரசியல் ரீதியாகவும் பலரது கவனத்தை ஈர்த்துள்ளன.
தமிழ் பிக்பாஸ் சீசன் 10 கடந்த 6-ம் தேதி தொடங்கிய நிலையில், முதல் வாரத்தை நிறைவு செய்துள்ளது. 19 போட்டியாளர்கள் பங்கேற்ற இந்த சீசனில், உடல்நலக் காரணங்களால் நடிகர் பிளாக் பாண்டி நிகழ்ச்சியில் இருந்து விலகியுள்ளார்.
ஒவ்வொரு வார இறுதியிலும் போட்டியாளர்களை சந்திக்கும் விஜய் சேதுபதி, அந்த வாரத்தில் வீட்டுக்குள் நடந்த முக்கிய சம்பவங்களைப் பற்றி அவர்களுடன் விவாதிப்பது நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக உள்ளது. போட்டியாளர்களின் செயல்பாடுகள், அவர்களுக்கிடையேயான கருத்து வேறுபாடுகள், தலைமைப் பொறுப்பில் நடந்த விஷயங்கள் என பலவற்றையும் அவர் நேரடியாக கேள்விக்கு உட்படுத்துகிறார்.
அந்த வகையில் இந்த வார நிகழ்ச்சியிலும் வீட்டின் தலைமைப் பொறுப்பில் இருந்த போட்டியாளரின் செயல்பாடுகள் குறித்து விஜய் சேதுபதி கேள்வி எழுப்பினார். தலைமை என்றால் என்ன என்பதையே புரிந்துகொள்ளாமல் வாக்குறுதிகளை வழங்கிவிட்டு, பிரச்னை வந்ததும் அதற்கான பொறுப்பை ஏற்காமல் மற்றவர்கள் மீது பழியை சுமத்திவிட்டு விலகுவது தலைமைப் பண்பாகாது என்ற கருத்தை அவர் முன்வைத்தார்.
விஜய் சேதுபதியின் இந்த பேச்சு நிகழ்ச்சியில் இருந்த போட்டியாளரை மட்டுமே குறிப்பதாக இருந்தாலும், அவரது வார்த்தைகளை அரசியல் பின்னணியுடன் ஒப்பிட்டு சமூக வலைதளங்களில் பலரும் விவாதித்து வருகின்றனர். குறிப்பாக வாக்குறுதிகள், பொறுப்பு, எதிரணியின் மீது பழி சுமத்துவது போன்ற வார்த்தைகளை வைத்து சிலர் தமிழக அரசியலுடன் இந்த பேச்சை இணைத்து கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சியின் வழக்கமான போட்டியாளர் விவாதத்தைத் தாண்டி, விஜய் சேதுபதியின் இந்த கருத்து தற்போது சமூக வலைதளங்களில் தனி விவாதமாக மாறியுள்ளது. அவரது பேச்சு உண்மையில் யாரை மனதில் வைத்து முன்வைக்கப்பட்டது என்ற கேள்வியும் இணையத்தில் ரசிகர்கள் மற்றும் அரசியல் ஆர்வலர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
Also Read: லண்டனில் முதல்வர் விஜய் தங்கியிருக்கும் சொகுசு ஹோட்டல்! ஒரு நாள் வாடகை எத்தனை லட்சம் தெரியுமா?



