Measles: தற்போது, ஏப்ரல் மாத வெப்பம் தனது அழிவைக் காட்டத் தொடங்கியுள்ளது. இதனால் ஹீட் ஸ்ட்ரோக், நீரிழப்பு, வயிற்றுப்போக்கு மற்றும் காய்ச்சல் போன்றவற்றால் யார் வேண்டுமானாலும் பாதிக்கப்பட வாய்ப்பு அதிகம்.. குறிப்பாக குழந்தைகள் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது, எனவே, இந்த பருவத்தில் ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகள் மீது சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.
இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஏதேனும் பிரச்சனை தொடர்ந்தால், உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. இந்த நிலையில், அதிகளவில் குழந்தைகளுக்கு அம்மை நோய் தாக்கி வருகிறது. சின்னம்மை வந்துவிட்டால் அதன் அலட்சியம் மரணத்தில் கூட முடிந்திருக்கிறது என சிவகங்கை அரசு மருத்துவமனை மருத்துவர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மருத்துவர் பரூக் அப்துல்லா தனது சமூகவலைதள பக்கத்தில், இது “சின்னம்மை” காலம், சின்னம்மை எனும் சிக்கன் பாக்ஸ் வேனிற் காலங்களில் பரவக்கூடிய வைரஸ் தொற்றாகும். பெரும்பாலும் குழந்தைகளுக்கும் பள்ளி பருவத்தில் உள்ள சிறார் சிறுமியருக்கும் இந்தத் தொற்று ஏற்படும் வாய்ப்பு அதிகம்.
ஒருமுறை தொற்று கண்டவர்களுக்கு பெரும்பாலும் மீண்டும் தொற்று ஏற்படுவதில்லை. இதற்குக் காரணம் – முதல் தொற்றின் மூலம் பெறப்படும் இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியானது மீண்டும் அதே நபருக்கு சின்னம்மை வராமல் தடுக்கிறது. எனினும் குறிப்பிட்ட சதவிகிதத்தினருக்கு முதல் முறை குழந்தைப் பருவத்தில் சின்னம்மை வந்திருந்தாலும் மீண்டும் வளர் இளம் பருவத்தில் கல்லூரி காலத்தில் ஏற்படலாம். இன்னும் வயது முதிர்ந்தோருக்கும் ஏற்படலாம்.
குழந்தைகளுக்கும் சிறார்களுக்கும் பெரும்பாலும் அச்சுறுத்தல் தராத சாதாரண நோயாகக் கடந்து செல்லும். எனினும் ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகள் எடை குறைவான / ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகள் எதிர்ப்பு சக்தி குன்றியோர், முதியோர் ஆகியோருக்கு சற்று தீவிரத்துடன் வெளிப்படலாம். இதர வைரஸ் காய்ச்சல்கள் போல முதல் இரண்டு நாட்கள் கடுமையான காய்ச்சலுடன் ஆரம்பிக்கும். பின் நெஞ்சுப் பகுதி , முதுகுப்பகுதி , முகம் எனத் தொடங்கி உடலின் அனைத்துப் பகுதியிலும் கொப்புளம் தோன்றும்.
இந்தக் கொப்புளம் பார்ப்பதற்கு பட்டாணிப் பயறு ( CHICK PEAS) போல இருந்தமையால் ஆங்கிலேயர் சிக்கன் பாக்ஸ் என்று பெயர் வழங்கினர். இந்த நோய்க்கும் சிக்கனுக்கும் ( ப்ராய்லர் / நாட்டுக் கோழி) துளி தொடர்பும் இல்லை… இல்லை… இல்லை… தமிழில் இதற்கு சின்னம்மை என்று பெயர் வைத்துள்ளோம். காரணம் இதை விட கொடூரமான பெரியம்மை என்ற தொற்று 1970களின் இறுதி வரை நமது உலகில் இருந்து வந்தது.
பலருக்கும் மரணத்தையும் உயிர் பிழைத்தோர்க்கு ஆறாத வடுக்களையும் பரிசாக வழங்கிய கொடூர நோய் அது. அழியாத பெரியம்மை வைரஸ்க்கு எதிராக செயல்படும் தடுப்பூசியைக் கொண்டு அந்த நோயை விரட்டியடித்தோம். சின்னம்மைக்கு எதிராகவும் தடுப்பூசி உள்ளது. ஆயினும் இது பெரியம்மை போல கொடூரமானது இல்லை என்பதாலும் மரண விகிதம் மிகவும் குறைவு என்பதாலும் இந்த தடுப்பூசி எதிர்ப்பு சக்தி குன்றியோருக்கு மட்டும் அவர் விருப்பத்தின் பேரில் செலுத்தப்படுகிறது.
கொப்புளம் அனைத்தும் அடுத்த ஏழு முதல் பத்து நாட்களுக்குள் சருகாகி விழுந்துவிடும். கொப்புளங்கள் தோன்றத் தொடங்குவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு தொடங்கி சருகாகுவது வரை தொற்று கண்டவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவும். தொற்று கண்டவர் இருமும் போதும் தும்மும் போதும் தொற்று கண்டவருடன் நேரடியாக தொடர்பில் இருப்பவருக்கும் பரவும். எனவே இந்தத் தொற்று கண்டவர்களை நோய் பரவும் காலம் மட்டும் தனிமையில் ( ISOLATION) வைக்க வேண்டும். அவருடன் தொடர்பில் இருந்தவர்களும் தங்களை இரண்டு வாரமேனும் தனிமைப்படுத்திக் (QUARANTINE) கொள்ள வேண்டும்.
Readmore: விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல்..? வெளியாகுமா அறிவிப்பு..? சத்யபிரதா சாஹூ முக்கிய தகவல்..!!