41 வயதான நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, போர்ச்சுகல் தேசிய கால்பந்து அணியின் ‘நேஷன்ஸ் லீக்’ தொடருக்கான புதிய அணியில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார். போர்ச்சுகல் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்றுள்ள ஜார்ஜ் ஜீசஸ், தனது முதல் வீரர்களின் பட்டியலை வெளியிட்டப்போது ரொனால்டோவின் பெயரை அதில் உறுதி செய்துள்ளார். சர்வதேச அளவில் 233 போட்டிகளில் விளையாடி 146 கோல்கள் அடித்து அதிக கோல்கள் அடித்த வரலாற்றுச் சாதனையாளராக விளங்கும் ரொனால்டோ, இதுவே தனது கடைசி சீசனாக இருக்கலாம் என்று சமீபத்தில் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
போர்ச்சுகல் அணி வரும் செப்டம்பர் 24-ஆம் தேதி லிஸ்பனில் நடைபெறும் ஆட்டத்தில் வேல்ஸ் அணியை எதிர்கொண்டு தனது நேஷன்ஸ் லீக் தொடரைத் தொடங்குகிறது. அதைத் தொடர்ந்து செப்டம்பர் 27-இல் நார்வே அணியையும், அக்டோபர் 1-இல் டென்மார்க் அணியையும் போர்ச்சுகல் சந்திக்கவுள்ளது. ஏற்கனவே 2025 நேஷன்ஸ் லீக் இறுதிப்போட்டியில் ஸ்பெயினை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற போர்ச்சுகல் அணி, இந்த முறையும் பட்டத்தைத் தக்கவைக்கும் முனைப்பில் களமிறங்குகிறது.
மற்றொரு முக்கிய மாற்றமாக, பிரான்ஸ் தேசிய கால்பந்து அணியின் புதிய பயிற்சியாளராகப் பொறுப்பேற்றுள்ள ஜினெடின் ஜிதேன், அணியின் கேப்டனாக எம்பாப்பே தொடர்வார் என அறிவித்துள்ளார். டிடியர் டெஸ்சாம்பஸுக்குப் பதிலாக பிரான்ஸ் அணியின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள ஜிதேனின் வழிகாட்டலில் பிரான்ஸ் அணி தனது முதல் நேஷன்ஸ் லீக் ஆட்டத்தில் துருக்கியை எதிர்கொள்கிறது.
அக்டோபர் 2-ஆம் தேதி பிரான்ஸின் ‘ஸ்டேட் டி பிரான்ஸ்’ மைதானத்தில் இத்தாலிக்கு எதிராக நடைபெறவுள்ள போட்டியே ஜிதேன் சொந்த மண்ணில் பயிற்சியாளராகக் களமிறங்கும் முதல் போட்டியாகும். புதிய வீரர்களுக்கு வாய்ப்பளித்துள்ள ஜிதேன், காயம் காரணமாகப் விலகியுள்ள ஆர்சனல் வீரா் வில்லியம் சாலிபா மற்றும் ரியல் மாட்ரிட் வீரர் சூவாமேனி ஆகியோருக்கு ஓய்வளித்துள்ளார்.



