குழந்தைகள் வீட்டில் உள்ள சுவர்களில் பென்சிலால் வரைவது வழக்கமான ஒன்றுதான். சுவரில் உள்ள பென்சில் கோடுகளை சேதமின்றி சில நிமிடங்களில் சுத்தம் செய்வதற்கான எளிய மற்றும் பயனுள்ள வழிமுறைகளை தெரிந்துகொள்ளுங்கள்.
பென்சில் கறைகளை அகற்றுவதற்கான மிக எளிய வழி ஒரு சுத்தமான, மென்மையான அழிப்பானை பயன்படுத்துவதாகும். கறை உள்ள இடத்தில் அதிக அழுத்தம் கொடுத்துத் தேய்க்காமல், மெதுவாகத் தேய்க்க வேண்டும். அதிக அழுத்தம் கொடுத்தால் சுவரின் வண்ணம் பாழாகக்கூடும். லேசான கறையாக இருந்தால் சில முறையிலேயே நீங்கிவிடும். மேலும், அழிப்பான் சுத்தமாக இருப்பதை உறுதிசெய்து கொள்வது கூடுதல் அழுக்கு சுவரில் ஒட்டுவதைத் தடுக்கும்.
அழிப்பானால் கறையை நீக்கிய பிறகும் லேசான அழுக்கு இருந்தால், மைக்ரோஃபைபர் துணியை பயன்படுத்தலாம். துணியை லேசாக நீரால் நனைத்து, தண்ணீரை நன்றாகப் பிழிந்த பிறகு, கறை உள்ள இடத்தை மெதுவாகத் துடைக்க வேண்டும். சுவரில் பலமாகத் தேய்ப்பதைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக மேட் ஃபினிஷ் சுவர்களில் பலமாகத் தேய்த்தால் சாயம் மங்க வாய்ப்புள்ளது.
பழைய அல்லது லேசில் போகாத பென்சில் கறைகளுக்குச் சமையல் சோடாவுடன் சிறிது நீர் கலந்து பேஸ்ட் போலச் செய்துகொள்ளலாம். இதைச் சுவரில் நேரடியாகப் பயன்படுத்துவதற்கு முன்பு, கண்ணில் படாத ஒரு சிறிய பகுதியில் சோதித்துப் பார்ப்பது நல்லது. சுவரில் எந்த மாற்றமும் இல்லை என்றால், கறை உள்ள இடத்தில் லேசாக தடவி, சிறிது நேரத்திற்குப் பின் மைக்ரோஃபைபர் துணியால் துடைத்து, உலர்ந்த துணியால் காய்ந்துபோகத் துடைக்க வேண்டும்.
லேசான பாத்திரம் கழுவும் திரவத்தை சிறிது நீரில் கலந்து, அதில் துணியை நனைத்து நன்றாகப் பிழிந்த பிறகும் கறையைத் துடைக்கலாம். சுவரின் மீது நேரடியாகத் தண்ணீரை ஊற்றவோ தெளிக்கவோ கூடாது. அதிகப்படியான ஈரம் சுவரைப் பாதிக்கும் என்பதால், சுத்தம் செய்த பிறகு உலர் துணியால் துடைப்பது அவசியமாகும்.
வீட்டில் மேஜிக் எரேசர் இருந்தால், அதைச் லேசாக நனைத்து பென்சில் கறையின் மீது மெதுவாகத் தேய்க்கலாம். இது சற்று உரசும் தன்மை கொண்டது என்பதால், சுவரின் நிறம் மாறுபடுகிறதா என்பதைச் சோதித்த பிறகே பயன்படுத்த வேண்டும்.
குழந்தைகள் சுவரில் ஆழமாக எழுதியிருந்தால், மீண்டும் மீண்டும் கடுமையாகத் தேய்ப்பதைத் தவிர்க்க வேண்டும். இது கறையை விட சுவரின் வண்ணத்தையே அதிகம் பாழ்படுத்தும். கறை மிகவும் ஆழமாக இருந்தால் அல்லது சுவரின் சாயம் ஏற்கனவே உரிந்திருந்தால், அப்பகுதியில் மட்டும் அதே நிறத்திலான டச்-அப் பெயிண்ட் (Touch-up paint) அடிக்கலாம். சாயம் பூசுவதற்கு முன் அப்பகுதியைச் சுத்தம் செய்து உலர வைக்க வேண்டும்.
குழந்தைகள் சுவரில் வரைவதைத் தடுக்க, அவர்கள் வரைய பிரத்யேகமாக ‘டிராயிங் போர்டு’ அல்லது தாள்களை அமைத்துக் கொடுக்கலாம். இதன் மூலம் குழந்தைகளின் படைப்பாற்றலும் வெளிப்படும், சுவர்களும் பாழாகாமல் இருக்கும். மேலும், வீட்டிற்குச் சாயம் பூசும்போது ‘வாஷபிள்’ வகை பெயிண்ட்டுகளைத் தேர்ந்தெடுத்தால், கறைகளை எளிதில் சுத்தம் செய்ய முடியும்.



