ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் அடக்குமுறைகளுக்கு நடுவே ஆண் வேடமிட்டு சைக்கிள் பயிற்சி மேற்கொண்டு வந்த ஆப்கான் வீராங்கனை ஃபரிபா ஹாஷிமி (Fariba Hashimi), ஜப்பானில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
ஜப்பானின் நகோயா நகருக்கு அருகில் நடைபெற்ற மகளிர்க்கான சாலை சைக்கிள் பந்தயத்தில் (Women’s Road Race), இத்தாலியில் வசித்து வரும் 23 வயதான ஃபரிபா ஹாஷிமி இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றினார். இப்போட்டியில் சீனாவின் குவோ லி (Guo Li) தங்கப் பதக்கம் வென்றார். “இந்த வெற்றி எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது; என்னால் எனது உணர்ச்சிகளை வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை” என்று ஃபரிபா நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானின் ஃபார்யாப் (Faryab) மாகாணத்தைச் சேர்ந்த ஃபரிபா, சிறு வயதில் தனது சகோதரி யுல்தூஸுடன் (Yulduz) இணைந்து சைக்கிள் பயிற்சி பெறத் தொடங்கியபோது கடுமையான எதிர்ப்புகளை சந்தித்துள்ளார். “கனவு காணும் பெண்கள் தாக்கப்படும் ஒரு நாட்டில் தான் நான் பிறந்தேன். ஆண்களைப் போல வேடமிட்டுத் தான் நான் பயிற்சி செய்வேன். எங்கள் மீது கற்கள் வீசித் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. ஆனால், அதையெல்லாம் எதிர்த்துப் போராடி இங்கு வந்துள்ளதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. அடுத்த தலைமுறைப் பெண்கள் எந்தவித பயமும் இன்றி தங்கள் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துவார்கள் என நம்புகிறேன்” என்று ஃபரிபா கூறியுள்ளார்.
2021-ல் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு, பெண்களின் கல்வி, விளையாட்டு உள்ளிட்ட அனைத்து உரிமைகளும் பறிக்கப்பட்டன. இதனால், இத்தாலியின் முன்னாள் உலகச் சாம்பியன் அலெசாண்ட்ரா கப்பெல்லோட்டோவின் உதவியுடன் ஃபரிபா ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறி இத்தாலியில் புகலிடம் பெற்றார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற இவர், தற்போது 2028 லாஸ் ஏஞ்சலஸ் ஒலிம்பிக் போட்டியை நோக்கித் தன் கவனத்தைச் செலுத்தி வருகிறார்.
இப்போட்டியில் தனக்கு மெக்கானிக் அல்லது எந்தவித தொழில்நுட்பக் குழுவும் இல்லாத நிலையில், தானே தன் சைக்கிளைப் பழுதுபார்த்து, கழுவிப் பயன்படுத்தியதாக ஃபரிபா தெரிவித்தார். இக்கட்டான நேரத்தில் தனக்கு உதவிய ஜப்பான் சைக்கிளிங் அணிக்கு அவர் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். “இந்த வெள்ளிப் பதக்கம் ஆப்கான் பெண்களின் மன உறுதியையும் போராட்டத்தையும் உலகுக்குக் காட்டுகிறது. என் பின்னணியில் லட்சக்கணக்கான பெண்கள் என்னுடன் நிற்கிறார்கள்” என்றும் அவர் நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டுள்ளார்.



