பொதுவாக புற்றுநோய் என்றாலே மரபணுக்கள், புகையிலை பயன்பாடு, காற்று மாசுபாடு, மதுபானம், தவறான உணவுப் பழக்கம் மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளால்தான் ஏற்படுகிறது என்று நாம் நினைக்கிறோம். ஆனால், சர்வதேச அளவில் மேற்கொள்ளப்பட்ட புதிய ஆய்வு ஒன்று முற்றிலும் மாறுபட்ட ஒரு தகவலை வெளியிட்டுள்ளது.
‘தி லான்செட் ஆன்காலஜி’ (The Lancet Oncology) மருத்துவ இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வின்படி, உலகளவில் கண்டறியப்படும் புதிய புற்றுநோய் பாதிப்புகளில் 12% (அதாவது 8-ல் 1 பங்கு) கிருமித் தொற்றுகளால் ஏற்படுகின்றன என்று கணக்கிடப்பட்டுள்ளது. 2024-ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 24 லட்சம் புற்றுநோய் பாதிப்புகள் இத்தகைய தொற்றுகளால் ஏற்பட்டுள்ளன. தடுப்பூசிகள், ஆரம்பக்கட்ட பரிசோதனைகள் மற்றும் சரியான சிகிச்சைகள் மூலம் இவற்றில் கணிசமான புற்றுநோய்களை தடுக்க முடியும் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
முக்கிய காரணமான கிருமிகள்: இந்த பாதிப்புகளுக்கு அரிதான கிருமிகள் காரணமல்ல; நாம் அறிந்த சில முக்கிய பாக்டீரியா மற்றும் வைரஸ்களே பிரதான காரணங்களாக உள்ளன. அதாவது, ஹெலிகோபாக்டர் பைலோரி (H. pylori), வயிற்றுப் புற்றுநோயை உருவாக்கும் இந்த பாக்டீரியாவால் சுமார் 7.6 லட்சம் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
ஹெச்பிவி (HPV – Human Papillomavirus): கர்ப்பப்பை வாய் (Cervical), வாய் மற்றும் தொண்டை புற்றுநோய்களுக்குக் காரணமான இந்த வைரஸால் சுமார் 7.5 லட்சம் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
ஹெபடைடிஸ் B (HBV): கல்லீரல் புற்றுநோயை ஏற்படுத்தும் இந்த வைரஸால் 3.6 லட்சம் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
எப்ஸ்டீன்-பார் வைரஸ் (EBV): நிணநீர் மண்டலப் புற்றுநோய் (Lymphoma) உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்தும் இந்த வைரஸால் 2.6 லட்சம் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
ஹெபடைடிஸ் C (HCV): கல்லீரல் புற்றுநோயை உண்டாக்கும் இந்த வைரஸால் 1.6 லட்சம் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
தொற்று எப்படி புற்றுநோயாக மாறுகிறது? சில கிருமித் தொற்றுகள் உடலில் பல ஆண்டுகள் தொடர்ந்து இருக்கும். இந்த நாள்பட்ட தொற்றுகள் உடலில் தொடர்ச்சியான அழற்சியை உண்டாக்கி, செல்களின் இயல்பான செயல்பாடுகளை சிதைக்கின்றன. காலப்போக்கில், இந்த மாற்றங்கள் இயல்புக்கு மாறான செல்கள் கட்டுப்பாடன்றிப் பெருக்கமடைந்து புற்றுநோயாக உருவெடுக்க வழிவகுக்கின்றன.
தடுக்கும் வழிகள் என்ன? இந்த ஆய்வில் ஒரு நேர்மறையான விஷயமும் உள்ளது. தொற்றுகளால் ஏற்படும் புற்றுநோய்களில் பெரும்பாலானவற்றை முன் கூட்டியே தடுக்க முடியும். ஹெச்பிவி (HPV) மற்றும் ஹெபடைடிஸ் B தொற்றுகளைத் தடுப்பூசி மூலம் முழுமையாகத் தடுக்கலாம்.
சிகிச்சைகள்: ஹெலிகோபாக்டர் பைலோரி பாக்டீரியா மற்றும் ஹெபடைடிஸ் C தொற்றுகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து மருந்துகளின் மூலம் குணப்படுத்த முடியும்.
பரிசோதனைகள்: கர்ப்பப்பை வாய் பரிசோதனை (Cervical Screening) மூலம் புற்றுநோய் ஏற்படுவதற்கு முன்பே பாதிப்புகளைக் கண்டறிய முடியும்.
அதே நேரத்தில், தொற்று ஏற்பட்ட அனைவருக்கும் புற்றுநோய் வந்துவிடும் என்று பயப்படத் தேவையில்லை என ஆய்வாளர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர். 12% என்பது ஒட்டுமொத்த மக்கள் தொகை அடிப்படையிலான கணக்கீடே தவிர, தொற்று ஏற்படும் ஒவ்வொரு தனிநபருக்கும் புற்றுநோய் வரும் என்பதற்கான சாத்தியக்கூறு அல்ல.
இருப்பினும், புற்றுநோய் தடுப்பு என்பது கட்டி உருவான பிறகு தொடங்குவது அல்ல; அதற்கு முன்பாகவே தடுப்பூசி போடுதல், தொற்றுகளைக் கண்டறிந்து சிகிச்சை பெறுதல் மற்றும் முறையான பரிசோதனைகளைச் செய்துகொள்வது ஆகியவற்றின் மூலமே தொடங்குகிறது என்பதை இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.



