கடந்த இரு தசாப்தங்களாக இந்திய கிரிக்கெட்டின் இரு பெரும் தூண்களாக திகழும் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இருவரின் கூட்டணி, ரசிகர்களால் ‘Ro-Ko’ என அன்போடு அழைக்கப்படுகிறது. வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டிக்கு முன்னதாக, விராட் கோலியுடனான தனது பிணைப்பு, ‘Ro-Ko’ என்ற பெயரின் பின்னணி மற்றும் 2027 ஒருநாள் உலகக்கோப்பைக்கான தங்களது அணுகுமுறை குறித்து ரோஹித் சர்மா மனம் திறந்து பேசியுள்ளார்.
சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்படும் ‘Ro-Ko’ என்ற பெயர் குறித்துப் பேசிய ரோஹித், “நாங்கள் ஆஸ்திரேலியாவில் விளையாடிய போது அல்லது அதற்கு பிறகு இந்தியாவில் விளையாடிய போதுதான் இந்த வார்த்தை தொடங்கியது என்று நினைக்கிறேன். தொலைக்காட்சியில் இதைப் பார்க்கும் போதெல்லாம் நானும் விராட்டும் ஒருவரையொருவர் பார்த்துச் சிரித்து கொள்வோம். மக்களுக்கு சில சுவாரஸ்யமான செய்திகள் தேவைப்படுகின்றன, அதுதான் இது” என்று ஜாலியாக கூறினார்.
2007-ல் ரோஹித்தும், 2008-ல் கோலியும் சர்வதேச கிரிக்கெட்டில் தங்களது பயணத்தைத் தொடங்கினர். கோலியின் பங்களிப்பைப் பாராட்டிய ரோஹித், “இந்திய கிரிக்கெட் அணிக்கு விராட் என்ன செய்துள்ளார் என்பதை பற்றி எந்தக் கேள்வியும் எழுப்ப முடியாது. அது அனைவருக்கும் வெளிப்படையாகத் தெரியும். குறிப்பாக டெஸ்ட் அணிக்கு அவர் தலைமை தாங்கிய விதம் அற்புதமானது. எங்களில் யாருக்காவது பேட்டிங்கில் ஏதேனும் சிக்கல் என்றால், மற்றொருவர் சென்று சுட்டிக்காட்டுவோம். இந்த ஆரோக்கியமான உரையாடல் எப்போதும் எங்களுக்குள் தொடர்கிறது” எனக் குறிப்பிட்டார்.
2027-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கோப்பை நெருங்கி வரும் நிலையில், அகமதாபாத்தில் நடைபெற்ற 2023 இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் ஏற்பட்ட மனவேதனை தரும் தோல்விக்குப் பிறகு, இந்த மூத்த வீரர்கள் ரகசியமாகப் பல வியூகங்களை வகுத்து வருவதாகப் பலர் கருதுகின்றனர்.
இதுதொடர்பான கேள்விக்கு பதிலளித்த ஹிட்மேன், முக்கியத் தொடர்கள் குறித்துப் பெரிய அளவிலான பேச்சுகளோ அல்லது தீவிரமான உத்தி சார்ந்த நினைவூட்டல்களோ தேவையில்லை; ஏனெனில், என்ன செய்ய வேண்டும் என்பது இருவருக்குமே நன்றாகத் தெரியும். 2011, 2015, 2019 மற்றும் 2023 ஆகிய உலகக் கோப்பைத் தொடர்களில் பங்கேற்ற பிறகு, தனது ஐந்தாவது 50 ஓவர் உலகக் கோப்பையில் விளையாடத் தயாராக இருக்கும் கோலியின் அனுபவத்தையும் அந்த மும்பை பேட்டர் (ரோஹித்) சுட்டிக்காட்டினார். அந்த முக்கியத் தொடரில் கோலியின் பங்கு எவ்வளவு முக்கியமானது என்பதை ரோஹித் நன்கு அறிவார்.
“இல்லை, இல்லை. அவர் பல ஆண்டுகளாக விளையாடி வருகிறார். அது 2027 உலகக் கோப்பையாக இருந்தாலும் சரி அல்லது 2023 உலகக் கோப்பையாக இருந்தாலும் சரி, அவருக்கு அதைப்பற்றி விளக்க வேண்டிய அவசியமில்லை. உலகக் கோப்பை என்பது உலகக் கோப்பைதான். அணியில் இடம்பெறவுள்ள அனைவரும் உலகக் கோப்பையின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்வார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். குறிப்பாக கோலி. சொல்லப்போனால், இந்த அணியிலேயே அதிக உலகக் கோப்பைகளில் விளையாடியவர் அவர்தான்… எனவே, அவர் அதிக போட்டிகளில் விளையாடியிருப்பதால், அதன் முக்கியத்துவம் அவருக்குத் தெரியும். அதனால், இதுகுறித்த விவாதங்கள் எதுவும் எங்களுக்குள் நடப்பதில்லை,” என்று ரோஹித் கூறினார்.
போட்டியின் போது தங்களுக்குள் நடக்கும் உரையாடல்கள் குறித்துப் பகிர்ந்த ரோஹித், “நாங்கள் ஒன்றாக பேட்டிங் செய்யும் போது, எந்தப் பந்துவீச்சாளரைத் தாக்குவது, யாரிடம் சிங்கிள் எடுப்பது என்பது பற்றியே பேசுவோம். சில நேரங்களில் எனது காலில் ஏதேனும் அசௌகரியம் இருந்தால், ‘தம்பி, பார்த்து ஓடு, எனக்குக் காலில் ஏதோ செய்கிறது’ என்று சொல்வேன். அவரும் அதைப் புரிந்துகொள்வார். நாங்கள் விளையாடத் தொடங்கிய காலத்தில் எப்படி இருந்ததோ, அதேபோலவே இப்போதும் எங்கள் பிணைப்பு ஜாலியாக தொடர்கிறது” என்று தெரிவித்தார்.



