மயிலாடுதுறை அருகே ஆனதாண்டவபுரம் வடக்குத் தெருவைச் சேர்ந்த ராஜகோபால் என்பவரின் மகன் தமிழ்ச்செல்வன் (50). அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பேருந்து நடத்துநராகப் பணியாற்றி வந்த இவர், திமுகவின் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்திலும் (தொமுச) முக்கியப் பொறுப்பு வகித்து வந்தார். இவரது குடும்பத்தினர் அனைவருமே திமுக ஆதரவாளர்களாவர். தமிழ்ச்செல்வன் தினசரி அதிகாலை 4:30 மணிக்கு தனது இருசக்கர வாகனத்தில் பணிக்குப் புறப்பட்டுச் சென்றுவிட்டு, இரவு 10 மணியளவில் வீடு திரும்புவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
இந்நிலையில், நேற்று பணிக்குச் சென்ற அவர், வழக்கத்திற்கு மாறாக நாள் முழுவதும் குடும்பத்தினரைத் தொடர்பு கொண்டு பேசவில்லை என்று கூறப்படுகிறது. இரவு நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் உறவினர்கள் பதற்றமடைந்து அவரைத் தேடி வந்தனர். இந்த சூழலில், நள்ளிரவில் ஆனதாண்டவபுரம் ரயில்வே கேட் அருகே உள்ள ஆற்காடு சாலையில், தமிழ்ச்செல்வன் வெட்டுக்காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடப்பது தெரியவந்தது. அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அவரை வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்துவிட்டுத் தப்பியோடியுள்ளனர்.
தகவலறிந்த மயிலாடுதுறை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, ரத்த வெள்ளத்தில் கிடந்த தமிழ்ச்செல்வனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சினேகா பிரியா சம்பவ இடத்திற்கு நேரில் சென்று கள ஆய்வு நடத்தி, அதிகாரிகளுக்குப் புலன் விசாரணைக்கான உத்தரவுகளைப் பிறப்பித்தார்.
இக்கொலைக்கு தொழில் போட்டி, முன்விரோதம் அல்லது வேறு ஏதேனும் அரசியல் காரணங்கள் பின்னணியில் உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தலைமறைவாகியுள்ள கொலையாளிகளை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆளும் கட்சியின் தொழிற்சங்க நிர்வாகி வெட்டிக் கொல்லப்பட்டதால் அசம்பாவிதங்களை தவிர்க்க அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


