ஃப்ளைதுபாய் விமானத்தில் உதவி விமானியின் கொடூரத் தாக்குதலையும் மீறி, ஆபத்தான சூழலில் சாதுரியமாகச் செயல்பட்டு 174 பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய இந்திய விமானி கேப்டன் ஸ்மித் மச்சாரிடம் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாகப் பேசி அவரது வீரத்தைப் பாராட்டினார். அபுதாபியில் சிகிச்சை பெற்று வரும் கேப்டன் ஸ்மித் மச்சார், பிரதமருடனான வீடியோ அழைப்பின் போது தனது அனுபவங்களையும், அந்த இக்கட்டான தருணத்தில் தனக்கு தைரியம் அளித்த விஷயங்களையும் உணர்ச்சிப்பூர்வமாகப் பகிர்ந்து கொண்டார்.
பிரதமர் மோடியுடன் பேசிய கேப்டன் ஸ்மித் மச்சார் மிகவும் உணர்ச்சிவசப்பட்டார். பிரதமர் மோடிதான் தனது மிகப்பெரிய வழிகாட்டி என்று கூறிய அவர், இத்தகைய தருணத்தில் பிரதமரிடம் பேசுவது தமக்குக் கிடைத்த மிகப்பெரிய பெருமை என்றும், இதைத் தாம் கற்பனை கூட செய்து பார்த்ததில்லை என்றும் தெரிவித்தார். தான் எந்தவொரு இக்கட்டான சூழலிலும் ‘அனுமன் சாலீசா’ பாராயணம் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளதாகவும், அந்த விபத்து நடந்த பயங்கரமான நிமிடங்களிலும் அனுமன் சாலீசாவை மனதிற்குள் உரைத்துத்தான் தனக்கான துணிவைப் பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.
வீரரான கேப்டன் ஸ்மித்தைப் பாராட்டிப் பேசிய பிரதமர் மோடி, இந்தியர்கள் மற்றவர்களின் உயிரைப் பறிப்பவர்கள் அல்ல என்றும், பிறர் உயிரைக் காப்பதற்காகத் தங்கள் உயிரையும் பணயம் வைக்கத் தயங்காதவர்கள் என்பதை கேப்டன் ஸ்மித் உலகிற்குப் பறைசாற்றியுள்ளார் என்றும் கூறினார். மேலும், பகவத் கீதையின் நற்போதனைகளுடன் அவரது தாய் கீதா பென் அவரைச் சிறப்பாக வளர்த்தெடுத்துள்ளார் என்றும் பிரதமர் புகழாரம் சூட்டினார்.
முன்னதாக, மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (UPSC) நூற்றாண்டு விழாவில் உரையாற்றிய பிரதமர் மோடி, சொந்த உயிரைப் பொருட்படுத்தாமல் போராடிய கேப்டன் ஸ்மித், மற்றொரு 9/11 பாணி தாக்குதல் சம்பவத்தைத் தடுத்து நிறுத்தியுள்ளார் என்று சுட்டிக்காட்டினார். 140 கோடி இந்தியர்களும் கேப்டன் ஸ்மித்தின் நலனுக்காகப் பிரார்த்தனை செய்வதாகவும், அவர் விரைவில் முழுமையாகக் குணமடைய விரும்புவதாகவும் தெரிவித்த பிரதமர், கேப்டன் ஸ்மித்தின் தந்தை, தாய் மற்றும் மனைவியுடனும் தொலைபேசியில் பேசி ஆறுதலும் தைரியமும் அளித்தார்.
கடந்த புதன்கிழமை, துபாயில் இருந்து டெல் அவீவ் நோக்கி 27 குழந்தைகள் உட்பட 174 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த ஃப்ளைதுபாய் (FZ1073) விமானத்தில், காக்பிட் அறைக்குள் கேப்டன் ஸ்மித் மச்சாரை அவரது உதவி விமானி கத்தியால் குத்திப் பலத்த காயப்படுத்தினார். விமானத்தைக் கீழே வீழ்த்த நடந்த இந்தச் சதி முயற்சியை, படுகாயமடைந்த நிலையிலும் கேப்டன் ஸ்மித் தனது அசாத்திய திறமையால் முறியடித்தார். அவசரச் சிக்னல்களை அனுப்பி, 34,000 அடியில் இருந்து 17,000 அடிக்கு விமானத்தைக் கீழே இறக்கி, சவுதி அரேபியாவின் தபுக் நகரில் உள்ள இளவரசர் சுல்தான் பின் அப்துல்அஜிஸ் விமானநிலையத்தில் பத்திரமாகத் தரையிறக்கினார்.
முதலில் சவுதி அரேபியாவின் தபுக் மருத்துவமனையில் அவசர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மேலதிக சிகிச்சைக்காக அவர் அபுதாபிக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்திய வெளியுறவு அமைச்சகம் (MEA) அவரது உடல்நிலையைத் தொடர்ந்து தீவிரமாகக் கண்காணித்து வருகிறது. ஐக்கிய அரபு அமீரகத்திற்கான இந்தியத் தூதர் தீபக் மிட்டல், மருத்துவமனைக்கு நேரில் சென்று கேப்டன் ஸ்மித் மற்றும் அவரது குடும்பத்தினரைச் சந்தித்து தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என உறுதியளித்துள்ளார்.



