வான்வழியில் ஆன்மீகப் பயணம்!ராமேஸ்வரத்தில் 600 ஏக்கரில் புதிய விமான நிலையம்!. மத்திய அரசின் அனுமதி கோர தமிழக அரசு முடிவு!.

rameswaram airport 30kb

ராமேஸ்வரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஆன்மீக, சுற்றுலாத் தலங்களுக்கான போக்குவரத்தைச் சீரமைக்கவும், மண்டல பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கவும் ராமநாதபுரம் மாவட்டம் மணிகானேரியில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கைகளைத் தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இத்திட்டத்திற்கான முதற்கட்டப் பணியாக, மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்திடம் இட அனுமதி கோரி விண்ணப்பிக்க தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் முடிவு செய்துள்ளது.


இராமேஸ்வரத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற இராமநாதசுவாமி திருக்கோவில், தனுஷ்கோடி, அரிச்சல்முனை மற்றும் முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் நினைவகம் போன்ற இடங்களைக் காண்பதற்காக நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். தற்போது இவர்கள் அனைவரும் சாலை மற்றும் இரயில் போக்குவரத்தையே முழுமையாக நம்பியுள்ளனர். எனவே, இப்பகுதிக்கான வான்வழித் தொடர்பை மேம்படுத்தும் நோக்கில் 2025-ஆம் ஆண்டு இந்த விமான நிலையத் திட்டம் அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது.

புதிய விமான நிலையம் அமைப்பதற்காக ராமநாதபுரம் மாவட்டத்தில் பாலங்குளம், தேவிபட்டினம், கும்பரம், களரி மற்றும் மணிகானேரி ஆகிய ஐந்து இடங்கள் தொடக்கத்தில் பரிசீலிக்கப்பட்டன. அவற்றில் முதற்கட்ட ஆய்வுக்குப் பிறகு கும்ப்ரமும் மணிகானேரியும் இறுதிப் பட்டியலுக்குத் தேர்வு செய்யப்பட்டன. தொடர்ந்து, இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் (AAI) நிபுணர் குழு நடத்திய கள ஆய்வின் அடிப்படையில், மணிகானேரி பகுதி விமான நிலையம் அமைப்பதற்கு ஏற்ற இடமாகத் தேர்வு செய்யப்பட்டது.

சுமார் 600 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ள இந்த விமான நிலையத்திற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகளுக்கு அரசு அனுமதி வழங்கி, பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இத்திட்டத்திற்கான அடுத்தகட்ட நடவடிக்கையாக, தேர்ந்தெடுக்கப்பட்ட மணிகானேரி இடத்திற்கு மத்திய அரசின் அதிகாரப்பூர்வ அனுமதியைப் பெறுவதற்கான விண்ணப்பப் பணிகளை டிட்கோ மேற்கொண்டு வருகிறது.

சென்னையின் இரண்டாவது விமான நிலையமாக அறிவிக்கப்பட்ட பரந்தூர் திட்டம் அண்மையில் கைவிடப்பட்ட போதிலும், இராமேஸ்வரம் விமான நிலையத் திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்த மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த விண்ணப்ப நடவடிக்கை இடத்திற்கான ஆரம்பக்கட்ட அனுமதியைப் பெறுவதற்கானதே என்பதால், கட்டுமானப் பணிகளின் கால அட்டவணை, திட்ட மதிப்பீடு அல்லது விமானங்கள் இயக்கம் தொடங்கும் தேதி குறித்த விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

1newsnationuser5

Next Post

இனி உலக வர்த்தகம் இந்தியாவின் கையில்! 80% நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தம்!. அமைச்சர் பியூஷ் கோயல் அதிரடி!

Sat Oct 3 , 2026
உலக அளவில் முன்னணி வர்த்தக மற்றும் முதலீட்டு மையமாக இந்தியா உருவெடுத்து வரும் நிலையில், உலகப் பொருளாதாரத்தில் சுமார் 75 முதல் 80 சதவீதப் பங்கைக் கொண்டுள்ள நாடுகளுடன் தாராள வர்த்தக ஒப்பந்தங்களை ஏற்படுத்த இந்தியா திட்டமிட்டுள்ளதாக மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் சிக்காகோ நகரில் ‘அமெரிக்க இந்திய சமூக அமைப்பு’ (US Indian Community Foundation) சார்பில் அமைக்கப்பட்ட நிகழ்ச்சியில் […]
piyush goyal 1

You May Like