தமிழக பள்ளிக்கல்வி துறையின் கீழ் இயங்கும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், 1 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலாண்டுத் தேர்வு விடுமுறை முடிந்து இன்று முதல் வழக்கம்போல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகின்றன.
மாநிலப் பாடத்திட்டத்தில் பயிலும் மாணவ, மாணவிகளுக்குக் காலாண்டுத் தேர்வுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து அளிக்கப்பட்ட 9 நாள் காலாண்டு விடுமுறை நேற்றுடன் முடிந்தது. இதையடுத்து இன்று பள்ளிகள் திறக்கப்படுவதை தொடர்ந்து, 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை படிக்கும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு 2-ஆம் பருவத்திற்கான புதிய பாடப்புத்தகங்களும் விலையில்லா நோட்டுப் புத்தகங்களும் பள்ளிகள் திறக்கும் முதல் நாளான இன்று வழங்கப்பட உள்ளன.
அதேசமயம், வரும் அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் வாக்குச்சாவடிப் பணிகள் காரணமாக, இவ்விரு தொகுதிகளுக்கு உட்பட்ட அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு இன்றும், நாளையும் (அக். 5, 6) இரண்டு நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் பள்ளிகளுக்கு வாக்குப்பதிவு நாளான அக். 6 அன்று மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த இரு தொகுதிகளிலும் உள்ள அனைத்துப் பள்ளிகளும் வாக்குப்பதிவு நிறைவடைந்து வரும் அக்டோபர் 7ஆம் தேதி முதல் செயல்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
Read More : அரிசி விலை கிடுகிடு உயர்வு! மூட்டைக்கு ரூ.500 வரை எகிறியது! கிலோ ரூ.100-ஐ தொடும் அபாயம்!



