“எனக்கு ஏதாவது நடந்தால் அதற்கு யார் காரணம் என்பது அனைவருக்கும் தெரியும்” என்று இன்ஸ்டாகிராம் பிரபலமான வஹிதா வெளியிட்டுள்ள புதிய பதிவு, பிக் பாஸ் முத்துக்குமரனுடனான சர்ச்சையை மீண்டும் பேசுபொருளாக்கியுள்ளது. ஏற்கெனவே இந்த விவகாரம் தொடர்பாக முத்துக்குமரன் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ள நிலையில், வஹிதாவின் தற்போதைய பதிவு சமூக வலைதளங்களில் கவனத்தைப் பெற்றுள்ளது.
தனது பதிவில், தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் தனக்கு இல்லை என்றும், தொடர்ந்து வாழவே விரும்புவதாகவும் வஹிதா தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், எதிர்காலத்தில் தனக்கு ஏதேனும் நேர்ந்தாலோ அல்லது தனது மரணம் தற்கொலை எனச் செய்திகள் வெளியானாலோ, அதற்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், தனது செல்போனில் முத்துக்குமரனின் பெயரை ‘ராவணன்’ என்று சேமித்து வைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்தப் பதிவைத் தனது பாதுகாப்பைக் கருத்தில் கொண்டே வெளியிடுவதாகக் குறிப்பிட்டுள்ள வஹிதா, தற்போது யார் மீதும் நம்பிக்கை இல்லை என்றும் கூறியுள்ளார். இருப்பினும், இதுவரை தனக்கு நேரடியாக எந்தவிதமான மிரட்டலும் வரவில்லை என்பதையும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
இந்தச் சர்ச்சையின் பின்னணி என்னவென்றால், முத்துக்குமரன் தன்னைத் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி ஏமாற்றிவிட்டதாக வஹிதா முன்பு குற்றம்சாட்டியிருந்தார். ஆனால், இருவருக்கும் இடையே நட்பு மட்டுமே இருந்ததாக முத்துக்குமரன் விளக்கமளித்தார். தன்னைப் பற்றி அவதூறான தகவல்கள் பரப்பப்படுவதாகக் கூறி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திலும் புகார் அளித்தார்.
இதற்கிடையே, முத்துக்குமரன் தொடர்பாகத் தான் ஏற்கெனவே வெளியிட்ட சில பதிவுகள் இன்ஸ்டாகிராம் பக்கத்திலிருந்து நீக்கப்பட்டுவிட்டதாக வஹிதா கூறியுள்ளார். மேலும், நேரலையில் பங்கேற்க முயன்றபோது 365 நாட்களுக்கு அனுமதி இல்லை என்ற அறிவிப்பு வந்ததாகவும், இதனால் முன்பு போல் நேரலையில் பேச முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
வஹிதாவின் புதிய பதிவைத் தொடர்ந்து, இருவருக்கும் இடையிலான விவகாரம் மீண்டும் சமூக வலைதளங்களில் விவாதமாகியுள்ளது. அவர் தனது பாதுகாப்பு குறித்த அச்சத்தை வெளிப்படுத்துகிறாரா, அல்லது முந்தைய சர்ச்சையின் தொடர்ச்சியாக இந்தப் பதிவை வெளியிட்டுள்ளாரா எனப் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
எனினும், வஹிதாவின் பதிவை மட்டும் வைத்து அவருக்கு ஆபத்து இருப்பதாகவோ, அதற்கு முத்துக்குமரன்தான் காரணம் என்றோ முடிவு செய்ய முடியாது. இரு தரப்பினரும் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பான உண்மைகள் உரிய விசாரணையின் மூலமே தெரியவரும். தற்போது, வஹிதாவின் புதிய பதிவு இந்த விவகாரத்தை மீண்டும் கவனத்துக்குக் கொண்டு வந்துள்ளது.
Also Read: இனி மொபைல் போனே தேவையில்லையா? இந்த ஒரு கண்ணாடி போதும்.. UPI பேமெண்ட், போட்டோ, வீடியோ எல்லாமே எடுக்கலாம்!



