நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு, குஜராத்தின் சூரத் நகரத்தைச் சேர்ந்த பைக் பிரியர்கள் துர்க்கை அம்மனுக்குத் தங்களது பக்தியைச் செலுத்தும் வகையில் ஒரு புதுமையான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தபாரி கடற்கரையில் (Dabhari Beach) 71 உயர்வகை பைக்குகளைக் கொண்டு, துர்க்கை அம்மனின் பிரம்மாண்ட உருவப் படத்தை உருவாக்கி அசத்தியுள்ளனர்.
பாரம்பரியப் பொருட்களைப் பயன்படுத்தாமல், தங்களின் அன்றாட விருப்பமான பைக்குகளைக் கொண்டே இந்த பிரம்மாண்ட வடிவத்தைக் கொண்டு வந்துள்ளனர். திறந்தவெளி மணற்பரப்பில் 71 பைக்குகளும் துல்லியமாக அடுக்கப்பட்டு உருவாக்கப்பட்ட இந்த ஓவிய வடிவம் காண்போரைக் கவரும் வகையில் அமைந்திருந்தது.
தங்களின் ஆர்வத்தையும் ஆன்மீகப் பற்றையும் ஒன்று இணைத்து, பண்டிகைக் காலக் கொண்டாட்டங்களுக்கு ஒரு புதிய பரிமாணத்தை இந்தப் பைக்கர்கள் குழு வழங்கியுள்ளது.
நாடு முழுவதும் நவராத்திரி கொண்டாட்டங்கள் களைகட்டி வரும் வேளையில், சூரத் பைக்கர்களின் இந்த வித்தியாசமான பக்தி முயற்சி சமூக வலைதளங்களில் பலரின் கவனத்தையும் ஈர்த்து பாராட்டைப் பெற்று வருகிறது.



