இந்தியாவில் இனி தெரியாத எண்களில் இருந்து வரும் அழைப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் வகையில், அனைத்து டெலிகாம் நிறுவனங்களுக்கும் ‘காலர் ஐடி’ (Caller ID) சேவையை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. வரும் நவம்பர் 1 முதல் இந்த புதிய விதி அமலுக்கு வருகிறது.
டெலிகாம் துறை அமைச்சகத்தின் (DoT) உத்தரவின்படி, 4G மற்றும் 5G நெட்வொர்க்குகளைப் பயன்படுத்தும் அனைத்து மொபைல் பயனர்களுக்கும் ‘காலர் நேம் பிரசென்டேஷன்’ (CNAP) முறை தானாகவே செயற்படுத்தப்படும். இதற்காக பயனர்கள் எந்தவொரு செயலியையும் பதிவிறக்கம் செய்யவோ அல்லது தனியாக அமைக்கவோ தேவையில்லை.
CNAP முறை எவ்வாறு செயல்படும்?
உங்களைத் தொடர்பொள்பவரின் எண் உங்கள் மொபைலில் சேமிக்கப்பட்டிருந்தாலும், இல்லாவிட்டாலும் அவர்களின் பெயர் மற்றும் எண் உங்கள் திரையில் தோன்றும்.
ஒருவேளை அந்த எண் ஏற்கனவே உங்கள் கான்டாக்ட் லிஸ்டில் இருந்தால், நீங்கள் என்ன பெயர் சேமித்துள்ளீர்களோ அந்தப் பெயர் காட்டும்.
புதிய எண்ணாக இருந்தால், டெலிகாம் நிறுவனத்தின் தரவுத்தளத்தில் (Database) உள்ள உரிமையாளரின் பெயர் திரையில் காண்பிக்கப்படும்.
வெளிநாடுகளில் இருந்து வரும் அழைப்புகளுக்கு ‘சர்வதேச அழைப்பு’ (International Call) என்றே திரையில் தோன்றும்.
தனியுரிமை மற்றும் பாதுகாப்பு விதிகள்:
பயனர்களின் தனியுரிமைக்கு முக்கியத்துவம் அளித்து, அழைப்பு முடிந்தவுடன் அழைப்பவரின் பெயர் உள்ளிட்ட தரவுகள் அனைத்தும் உடனடியாக அழிக்கப்படும் என DoT தெரிவித்துள்ளது. மேலும், வணிக நிறுவனங்கள் தங்களது வர்த்தகப் பெயரைப் பயன்படுத்த வேண்டுமானால், அதற்கு பதிவு செய்யப்பட்ட வர்த்தக முத்திரை அல்லது ஜிஎஸ்டி சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும்.
தற்போதைய கட்டத்தில் 4G மற்றும் அதற்கு மேற்பட்ட நெட்வொர்க்குகளுக்கு மட்டுமே இந்த வசதி அறிமுகப்படுத்தப்படுகிறது. 2G, 3G மற்றும் சாதாரண லேண்ட்லைன் இணைப்புகளுக்கும் இதனை விரிவுபடுத்துவது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது.
டிராய் அமைப்பின் வழிகாட்டுதல்கள் மற்றும் சோதனைகளுக்குப் பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆன்லைன் மோசடி அழைப்புகளைக் குறைத்து, பயனர்கள் விழிப்புடன் இருக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.



