தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் இருந்து ஏராளமான பெண்கள் நீக்கப்படுவதாக வெளியான தகவல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்நிலையில், பயனாளிகள் நீக்கம் தொடர்பாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் பின்னணி
கடந்த 2023ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் மூலம் தகுதியுள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் சுமார் 1.06 கோடி பெண்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்பட்டது. பின்னர் கூடுதல் பயனாளிகள் சேர்க்கப்பட்டதைத் தொடர்ந்து, திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெறுவோரின் எண்ணிக்கை சுமார் 1.31 கோடியாக உயர்ந்தது.
புதிதாக இணைக்கப்பட்ட பெண்களுக்கு பணம் வரவில்லையா?
இரண்டாம் கட்டமாக மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் இணைக்கப்பட்ட பெண்களில் பலருக்கு மாதாந்திர உதவித்தொகை கிடைக்கவில்லை என்ற புகார்கள் எழுந்தன. புதிதாக சேர்க்கப்பட்ட பயனாளிகளில் கணிசமானோர் உதவித்தொகை பெறவில்லை என்றும் தகவல்கள் வெளியாகின. இதனால், மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பயனாளிகள் எண்ணிக்கை குறைக்கப்படுகிறதா என்ற கேள்வியும் எழுந்தது.
பயனாளிகள் நீக்கம் குறித்து தமிழக அரசு விளக்கம்
இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் இருந்து பெருமளவில் பயனாளிகள் நீக்கப்படுவதாக வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை என அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும், திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெறும் பெண்களில் 50 சதவீதம் பேர் நீக்கப்பட்டதாகக் கூறப்படும் தகவல்களும் தவறானவை என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
ரூ.2,500 ஆக உயருமா மகளிர் உரிமைத்தொகை?
மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் தற்போது மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படுகிறது. தேர்தல் வாக்குறுதியில் இந்தத் தொகையை ரூ.2,500 ஆக உயர்த்துவதாக விஜய் அறிவித்திருந்தார். இந்த நிலையில், மகளிர் உரிமைத்தொகை உயர்வு எப்போது அமலுக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு பெண்களிடையே அதிகரித்துள்ளது. மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பயனாளிகள் நீக்கம் தொடர்பான சர்ச்சைக்கு தமிழக அரசு விளக்கம் அளித்துள்ள நிலையில், மாதாந்திர உதவித்தொகை தொடர்ந்து கிடைக்குமா, புதிய பயனாளிகள் எப்போது பயன்பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.



