சென்னை: தமிழக அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியின் தமிழக வெற்றிக் கழக (தவெக) எம்.எல்.ஏ. வி.எஸ். பாபு இன்று (நவம்பர் 19, 2026) காலமானார். அவருக்கு வயது 75.
செப்டம்பர் முதல் மருத்துவமனையில் சிகிச்சை
வி.எஸ். பாபுவுக்கு கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி மூச்சுத்திணறல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, சென்னை அமைந்தகரையில் உள்ள எம்.ஜி.எம். ஹெல்த்கேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, பல்வேறு மருத்துவத் துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். சுமார் 70 நாட்களுக்கும் மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் அவரது உடல்நிலையில் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படவில்லை.
மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பு
வி.எஸ். பாபுவின் மறைவு குறித்து மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டுள்ளது.நீண்டகால சுவாசப் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், சிகிச்சையின்போது உடல்நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து மாரடைப்பு ஏற்பட்டதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து நவம்பர் 19ஆம் தேதி பிற்பகல் 2.24 மணிக்கு அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது.
ஸ்டாலினை தோற்கடித்த வி.எஸ். பாபு
வி.எஸ். பாபு தனது அரசியல் பயணத்தை திமுகவில் தொடங்கினார். 2006ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் புரசைவாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினரானார்.பின்னர் திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். தொடர்ந்து, 2026 பிப்ரவரி 7ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார்.2026 சட்டமன்றத் தேர்தலில் தவெக சார்பில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட அவர், திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலினை 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றார்.
கொளத்தூர் தொகுதியில் இடைத்தேர்தல் வருமா?
வி.எஸ். பாபுவின் மறைவைத் தொடர்ந்து கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி காலியாகியுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் திருச்சி கிழக்கு, பெருந்துறை, அம்பாசமுத்திரம், விராலிமலை, கரூர் ஆகிய தொகுதிகள் காலியாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.இதனால் காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளது. இந்தத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பைப் பொறுத்தே அமையும்.வி.எஸ். பாபுவின் மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.



