“தம்பி வேகமாக போகாதே” அட்வைஸ் செய்தவரை வீடு புகுந்து வெட்டிய சிறுவர்கள்..!

Comic Style Street Assault Arrest

பொதுமக்களுக்கு இடையூறாக சாலையில் அதிவேகமாக இருசக்கர வாகனம் ஓட்டியதைத் தட்டிக்கேட்ட இரண்டு பேரை அரிவாளால் தாக்கிய 5 சிறுவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் நடைபெற்ற இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிவேகமாக பைக் ஓட்டிய சிறுவன்


தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் வடக்கு ரத வீதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் என்ற சைமன். இவர் ஓட்டுநராக வேலை செய்து வருகிறார். கடந்த 30-ம் தேதி தெப்பக்குளம் பகுதியில் ஜெயக்குமார் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது 17 வயதுடைய சிறுவன் ஒருவர் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாகச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதனைப் பார்த்த ஜெயக்குமார், சிறுவனின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டித்துள்ளார்.

வீட்டிற்குச் சென்று தகராறு செய்த 5 சிறுவர்கள்

இந்த நிலையில், சம்பவத்தன்று ஜெயக்குமார் தனது வீட்டில் இருந்துள்ளார். அவருடன் எலக்ட்ரிக்கல் சர்வீஸ் கடை நடத்தி வரும் அவரது உறவினர் கதிரேசனும் இருந்துள்ளார்.

அப்போது, ஏற்கனவே பைக்கை வேகமாக ஓட்டியதாகக் கூறப்படும் 17 வயது சிறுவன் உள்ளிட்ட 5 சிறுவர்கள் அங்கு வந்துள்ளனர். தங்களைப் பற்றி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தது யார் எனக் கேட்டு ஜெயக்குமாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கு பதிலளித்த ஜெயக்குமார், காவல் நிலையத்தில் தான் எந்தப் புகாரும் அளிக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார். இருப்பினும், அவரது விளக்கத்தை ஏற்க மறுத்த சிறுவர்கள் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

அரிவாளால் தாக்குதல் – இருவர் படுகாயம்

வாக்குவாதம் முற்றிய நிலையில், சிறுவர்கள் தங்களிடம் வைத்திருந்த அரிவாளால் ஜெயக்குமாரைத் தாக்கியுள்ளனர். இதில் அவரது தலையில் வெட்டுக்காயம் ஏற்பட்டது.

ஜெயக்குமாரை காப்பாற்றுவதற்காக குறுக்கே வந்த கதிரேசனுக்கும் கையில் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. இதனைத் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்ட 5 சிறுவர்களும் அங்கிருந்து தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

5 சிறுவர்களையும் கைது செய்த போலீசார்

இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் எட்டயபுரம் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். காயமடைந்த ஜெயக்குமார் மற்றும் கதிரேசன் ஆகிய இருவரையும் மீட்டு எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், மேல் சிகிச்சைக்காக இருவரும் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதற்கிடையே, தாக்குதல் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த எட்டயபுரம் போலீசார், இதில் தொடர்புடைய 5 சிறுவர்களையும் கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதிவேகமாக பைக் ஓட்டியதைத் தட்டிக்கேட்ட விவகாரம் அரிவாள் தாக்குதல் வரை சென்றிருப்பது எட்டயபுரம் பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

English Summary

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் அதிவேகமாக பைக் ஓட்டியதைக் கண்டித்தவர்களை வீடு புகுந்து அரிவாளால் வெட்டிய வழக்கில் 5 சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

maha

Next Post

டேராடூனில் குப்பை கூளத்தில் வீசப்பட்ட இளம்பெண் சடலம்: முகத்தை சிதைத்து கொடூர கொலை செய்த மர்ம நபர்கள் தேடல் தீவிரம்

Fri Nov 20 , 2026
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் குப்பைக் குவியலில் சாக்கு மூட்டையில் வீசப்பட்ட இளம்பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முகமும் கழுத்தும் சிதைக்கப்பட்ட நிலையில் பெண்ணை கொலை செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
crime scene investigation

You May Like