சென்னை தாம்பரம் அடுத்த மாடம்பாக்கத்தில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த தேர்தல் பறக்கும் படையினர் அந்த வழியே வந்த ஒரு மினி வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அந்த மினி வேனில் மது பாட்டிகள் இருந்ததையடுத்து அந்த வேனை சேலையூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதனையடுத்து மினி வேனை ஓட்டிவந்த ஓட்டுனர் ஏழுமலையிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். அதில் கோவிலஞ்சேரி பகுதியில் உள்ள ஒருவரிடம் சில பொருட்களை கொண்டு சென்று வழங்குமாறு கூறியதாகவும், தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் தான் அதில் மதுபாட்டில்கள் இருப்பது என்க்கே தெரிய வந்தது என்று ஏழுமலை கூறியுள்ளார்.
இதனையடுத்து ரூ.3 லட்சம் மதிப்புடைய, 1,500க்கும் மேற்பட்ட மதுபாட்டில்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். தமிழக்தில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி நேற்று முதல் மூன்று நாட்களுக்கு அரசு மதுபான கடைகளுக்கு விடுமுறை என்பதால் கள்ளச்சந்தையில் விற்பதற்காக கொண்டுவரப்பட்டதா என்று காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.