2023-24ஆம் கல்வியாண்டில் சுமார் 7,60,606 மாணவர்கள் தேர்வு எழுதினர். அதில் மொத்தம் 7,19,196 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 3 லட்சத்து 52 ஆயிரத்து 165 பேர் மாணவர்கள், 4 லட்சத்து 8 ஆயிரத்து 790 பேர் மாணவியர் ஆவர். இது 94.56% மாணவர்கள் தேர்ச்சியைக் குறிக்கும். ஆனால், இத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தால், அதற்கான அறிவிப்பும் விரைவில் வெளியிடப்பட உள்ளன.
பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள், பொதுத்தேர்வு எழுத முடியாத மாணவர்கள் மற்றும் தனி தேர்வர்கள் இந்த ஆண்டுக்குள்ளேயே தங்களது 12ஆம் வகுப்பு படிப்பை முடிப்பதற்காகவே தமிழ்நாடு பள்ளி கல்வி இயக்ககம் துணை தேர்வுகளை நடத்தி வருகிறது. ஆண்டுதோறும் தேர்வு முடிவுகள் வெளியான அடுத்த இரண்டு மாதங்களுக்குள் தேர்வுகள் நடத்தப்படும். பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற முடியாத மாணவர்கள் இந்த துணை தேர்வு மூலம் தங்களது பிளஸ் டூ தேர்வுகளை உடனடியாக எழுதி தேர்ச்சி பெறலாம்.
2023-24 ஆம் கல்வியாண்டிற்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில், துணை தேர்வுக்கான அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2024ஆம் ஆண்டிற்கான துணை தேர்வுகள் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான முடிவுகள் செப்டம்பர் மாதத்தில் வெளியாகும்.
எப்படி விண்ணப்பிப்பது ?
அரசு தேர்வுகள் இயக்ககம் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மேல்நிலை இரண்டாம் ஆண்டு – பிளஸ் 2 தேர்வர்களுக்கு துணைத்தேர்வு குறித்த அறிவிப்பை வெளியிடும்.பிறகு மாணவர்கள் துணை தேர்வை எழுத வேண்டிய பாடப்பிரிவுகளுக்கு மட்டும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வழியாக விண்ணப்பிக்கலாம். எழுத வேண்டிய தாள்களை தேர்ந்தெடுத்து அதற்கான கட்டணத்தை செலுத்தி விண்ணப்பிக்கலாம்.
தேர்வு கட்டணம் எவ்வளவு?
பொது தேர்வில் தேர்வு எழுத முடியாதவர்கள், தனித்தேர்வர்கள், இதுவரை தேர்வு எழுதாத நபர்கள் புதிதாக துணை தேர்வில் ஒரு பாடத்தை எழுத போகிறார்கள் என்றால் அவர்களுக்கு தேர்வு ஒரு தாளுக்கான கட்டணமாக 185 ரூபாயும் இணையதள கட்டணம் 70 ரூபாய் என மொத்தமாக 255 ரூபாய் செலுத்த வேண்டும். ஏற்கனவே பொதுத் தேர்வில் பங்கேற்று அதில் தோல்வி அடைந்தவர்கள் மீண்டும் அந்த பாடத்தை துணை தேர்வில் எழுத வேண்டும் என்றால் அவர்களுக்கு தாளுக்கான கட்டணம் மற்றும் இணையதள கட்டணம் எல்லாம் சேர்த்து 155 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டியிருக்கும்.