கோடைக்காலத்திற்கு ஆரோக்கியமான பானம் என்று நாம் கருதி குடிக்கக் கூடிய பானங்கள் கூட நம் உடலுக்கு தீங்கை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
கோடைக்காலத்தில் பாட்டில்களில் அடைத்து விற்கப்படும் ஜூஸ் வகைகளை குடித்தால் உடல்நலத்திற்கு கேடு என்று மருத்துவர்கள் எச்சரித்திருப்பதை பார்த்திருப்போம். அதே வேளையில் Fresh ஜூஸ்-க்களை எடுத்துக்கொள்ளலாம். அவை உடலுக்கு எந்த தீங்கும் விளைவிக்காது என்று சொல்வதையும் பார்த்திருப்போம். ஆனால், Fresh ஜூஸ் குடிப்பதாலும் நம் உடலில் சில பிரச்னைகள் ஏற்படும் அபாயம் உள்ளது என்று சொல்லப்படுகிறது. அப்படி என்னென்ன பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
நாம் வீட்டில் Freshஆக செய்த பழச்சாறுகளில் கடைகளில் விற்கப்படும் சாறுகளைப் போலவே அதிக சர்க்கரை இருக்கும் மற்றும் முழு பழங்கள் வழங்கும் அத்தியாவசிய நார்கள் இதில் இருக்காது. நார்ச்சத்து என்பது சர்க்கரை மெதுவாக உறிஞ்சப்படுவதை உறுதி செய்து செரிமானத்தை ஊக்குவிக்கிறது என்பதை மனதில் கொள்ளுங்கள்.
பழங்களை நாம் பிழிந்து அருந்தியதும் ரத்தத்தில் உடனடியாக சர்க்கரையின் அளவு அதிகமாகிவிடும். இது நீங்கள் சோடா குடிப்பதற்கு சமம். இதனால் உங்களுடைய கலோரி அதிகரிக்கிறது. அதுமட்டுமல்லாமல் முழு பழங்கள் சாப்பிட்ட பிறகு கிடைக்கும் வயிறு நிரம்பிய உணர்வு இதில் கிடைக்காது. மேலும் இது பெரும்பாலும் அதிகப்படியாக உணவு சாப்பிடுவது மற்றும் அதனால் உடல் எடை அதிகரிப்பு போன்றவற்றை விளைவிக்கிறது. எனவே எப்பொழுதும் பழச்சாறுகளை காட்டிலும் முழு பழங்களை தேர்வு செய்வது புத்திசாலித்தனமாக யோசனையாக இருக்கும். ஏனெனில் முழு பழங்களில் அதிக நார்ச்சத்து இருப்பதால் அது உங்களுக்கு வயிறு நிரம்பிய உணர்வு அளித்து செரிமானத்தை சீரமைக்கிறது.
நீங்கள் பழங்களில் இருந்து சாற்றை பிழிந்து எடுக்கும் சமயத்தில் அதில் இருக்கும் எக்கச்சக்கமான ஊட்டச்சத்துக்கள் இழக்கப்படுகிறது. இதில் வைட்டமின்கள், மினரல்கள் மற்றும் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் அடங்கும். மேலும் சாற்றை பிழிந்த உடனேயே அதனை நீங்கள் பருகவில்லை என்றால், மேலும் அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் அழிக்கப்படுகிறது.மேலும் பழச்சாறுகள் அமிலத்தன்மை நிறைந்தவை மற்றும் அது சொத்தை மற்றும் ஈறு சேதத்தை ஏற்படுத்தும். இயற்கை சர்க்கரைகள் அதிகமாக உள்ளது. குறிப்பாக நீங்கள் அடிக்கடி அல்லது அதிக அளவில் பழச்சாறுகளை சாப்பிடும் பொழுது அது உங்கள் வாய்வழி ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கலாம்.
பொதுவாக பழங்கள் என்றாலே ஊட்டச்சத்துக்கள் தான். ஆனால் அவற்றை நாம் சரியான முறையில் சாப்பிட்டால் மட்டும்தான் அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் நமக்கு கிடைக்கும். பழங்களை முழுதாக நறுக்கிய உடனேயே சாப்பிடுவது சிறந்தது. பழங்களில் பல்வேறு வைட்டமின்கள், மினரல்கள் மற்றும் ஆன்டி ஆக்சிடன்ட்கள் அதிக அளவில் உள்ளன. நமது அன்றாட உணவில் பழங்களை சேர்த்து சாப்பிட்டு வந்தால் நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம். அதே வேளையில் கோடை காலத்திற்கு ஏற்ற வகையில் உணவை மாற்றி அமைப்பது மிகவும் நல்லது.