Flood: வடக்கு ஆப்கானிஸ்தானில் கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி 60 பேர் பலியாகியுள்ளதாகவும் மற்றும் 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் பலர் காணாமல் போனதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் நாட்டில் பல்வேறு இடங்களில் கடந்த சில தினங்களாக கனமழை வெளுத்துவாங்கி வருகிறது. இதனால், கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அந்தவகையில், பாக்லான் மாகாணத்தில் ஐந்து மாவட்டங்களில் கனமழை பெய்ததால் ஏராளமான மக்கள் காணாமல் போயுள்ளனர். வடக்கு ஆப்கானிஸ்தானில் கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி 60 பேர் பலியாகியுள்ளதாகவும் மற்றும் 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் பலர் காணாமல் போனதாகவும் தலிபான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நேற்று இரவு இப்பகுதி முழுவதும் மேலும் இரண்டு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதனால் இறப்பு எண்ணிக்கை உயரக்கூடும் அச்சம் ஏற்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானின் உள்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அப்துல் மதீன் கானின் கூறியதாவது, இறந்தவர்கள் பாக்லான் மாகாணத்தில் உள்ள போர்கா மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்று கூறினார். அங்கு 200க்கும் மேற்பட்டோர் வீடுகளுக்குள் சிக்கியுள்ளனர். தலைநகர் காபூலுக்கு நேரடியாக வடக்கே அமைந்துள்ள பாக்லானுக்கு ஹெலிகாப்டர்கள் அனுப்பப்பட்டு மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.
இராணுவம் உட்பட அவசரகால பணியாளர்கள் “சேறு மற்றும் இடிபாடுகளுக்கு அடியில் பாதிக்கப்பட்டவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்றுவருவதாகவும் உள்ளூர் அதிகாரி ஹெதயதுல்லா ஹம்தார்ட் தெரிவித்துள்ளார். வீடுகளை இழந்த சில குடும்பங்களுக்கு கூடாரங்கள், போர்வைகள் மற்றும் உணவு வழங்கப்பட்டு வருகிறது. மேலும் கடும் வெள்ளப்பெருக்கால் காபூலை வடக்கு ஆப்கானிஸ்தானுடன் இணைக்கும் பிரதான சாலை மூடப்பட்டுள்ளது.
அதாவது, கடந்த ஏப்ரல் மாதம் பெய்த கனமழை வெள்ளத்தில் சிக்கி 100க்கும் மேற்பட்டோர் பலியாகினர். சுமார் 2,000 வீடுகள், மூன்று மசூதிகள் மற்றும் நான்கு பள்ளிகளும் சேதமடைந்தன.