திமுக வேலூர் ஒன்றியச் செயலாளராக இருப்பவர் ஞானம் என்கிற சி.எல்.ஞானசேகரன். இவரது மனைவி அமுதா வேலூர் ஒன்றியக் குழுத்தலைவராக உள்ளாட்சிப் பதவி வகிக்கிறார். இவர்களது மகன் சரண் தனது நண்பர்களுடன் சேர்ந்து வேலூர் அலமேலுமங்காபுரம் அருகே வெங்கடாபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் `அங்கன்வாடி’ மையத்திற்குள் புகுந்து மது குடித்து சிகரெட் புகைத்து, பட்டாக் கத்திகளுடன் ரீல்ஸ் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.
சமீபத்தில் வெளியான ஃபகத் பாசிலின் ஆவேஷம் படத்தில் வரும் `இலுமினாட்டி’ பாடலுக்கு ரீல்ஸ் எடுத்துள்ளனர். அங்கன்வாடி மையத்தில் இளைஞர்களை சேர்த்துக்கொண்டு திமுக பிரமுகரின் பிரமுகரின் மகன் குத்தாட்டம் போட்ட இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து சரணின் தந்தை ஞானசேகரன் கூறுகையில், “அந்த அங்கன்வாடி மையம் சேதாரமாக உள்ளது. ரூ.4.96 லட்சத்துக்கு டெண்டர் விட்டு கழிவறை வசதியுடன் அங்கன்வாடி மையத்தை கட்டடத்தை புதுப்பிக்கும் வேலையும் தொடங்கப்பட்டிருக்கிறது.
பழைய கட்டடம் என்பதால் தனது மகன் ரீல்ஸ் வீடியோ எடுத்துள்ளான். சினிமாவிலும், ஷார்ட் ஃபிலிமிலும் அவர் நடிக்கிறார். தன்னை பிரபலப்படுத்திக் கொள்வதற்காக கடந்த இரண்டு ஆண்டுகளாக இப்படித்தான் சின்னச்சின்னதாக ரீல்ஸ் எடுத்து போடுகிறார். இந்த விவகாரத்தை பெரிதாக்க வேண்டாம்” என அலட்சியமாக விளக்கம் அளித்துள்ளார்.