கொல்கத்தாவிற்கு சிகிச்சைக்காக வந்த வங்கதேச எம்.பி. கொலை செய்யப்பட்ட சம்பவம் இரு நாட்டு அரசு இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வங்கதேசத்தில், ஆளும் அவாமி லீக் கட்சியின் எம்.பி.யான அன்வருல், கடந்த மே 12-ம் தேதி மருத்துவ சிகிச்சைக்காக கொல்கத்தா வந்திருந்தார். அங்கு அவர் பாராநகரில் உள்ள அவரது நண்பருக்கு சொந்தமான சஞ்சீவ் கார்டன் குடியிருப்பில் தங்கியிருந்தார். அவர் டெல்லி வந்தடைந்ததும் தனது குடும்பத்தினருக்கு தனது செல்போன் மூலமாக தகவல் தெரிவித்துள்ளார். அதைத் தொடர்ந்து அவர் காணாமல் போனதாக தகவல் வெளியானது. இதுதொடர்பாக மே 18 அன்று கொல்கத்தா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
அண்டை நாட்டு எம்.பி. என்பதால் இவர் மாயமான தகவல் குறித்து ரகசியமாக போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த சூழலில், அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. அவர் கடைசியாக தங்கியிருந்த சஞ்சீவ கார்டன் குடியிருப்பில் ரத்தக்கறைகளை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
இதுகுறித்து காவல் துறையினர் கூறியதாவது, “அவரது உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது. சில உடல் பாகங்கள் கொல்கத்தாவின் நியூ டவுனில் உள்ள சஞ்சீவா கார்டனின் குடியிருப்பில் இருந்து மீட்கப்பட்டன” என்றார். மேலும், இந்த குடியிருப்பு கலால் வரி அதிகாரி ஒருவருக்கு சொந்தமானது. இந்திய சிறப்பு அதிரடிப்படை இந்த வழக்கை கவனித்து வருகிறது, மத்திய புலனாய்வு பிரிவு மற்றும் பாரக்பூர் துப்பறியும் பிரிவு அதிகாரிகள் குற்றம் நடந்த இடத்தில் உள்ளனர்.
இதுகுறித்து பங்களாதேஷ் உள்துறை அமைச்சர் கூறுகையில், “”இந்தியாவைச் சேர்ந்த டிஐஜி ஒருவரை மேற்கோள் காட்டி, கொல்கத்தாவில் அசிமின் சடலம் மீட்கப்பட்டதாக எங்கள் போலீசார் தெரிவித்தனர். இந்த விவகாரம் குறித்து எங்களுக்கு இன்னும் முழுமையாக உறுதியான தகவல்கள் இல்லை. எங்கள் இன்ஸ்பெக்டர் ஜெனரல் விவரங்களை ஆராய்ந்து வருகிறார்” என்றார்.
இந்த விவகாரம் தொடர்பாக வங்கதேச நாட்டு அரசுக்கும், அந்த நாட்டு காவல்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, வங்கதேச போலீசார் அந்த நாட்டில் 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தியாவிற்கு சிகிச்சைக்காக வந்த வங்கதேச எம்.பி. மர்மநபர்களால் கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.