Dinesh Karthik: நேற்றைய எலிமினேட்டர் போட்டியில் தோல்வியடைந்ததையடுத்து ஐபிஎல்லில் இருந்து ஓய்வு பெற்றதாக ஆர்சிபி அணி வீரர் தினேஷ் கார்த்திக் அறிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் நேற்று நடைபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான எலிமினேட்டர் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்தது. இதில் வீராட் கோலி 33 ரன்களும், ராஜாத் படிதர் 34 ரன்களும், மகிபால் 32 ரன்களும், கேமரூன் 27 ரன்களும் எடுத்தனர். ராஜஸ்தான் ராயல்ஸ் தரப்பில் ஆவேஸ் கான் 3 விக்கெட்டுகளும், ரவிச்சந்திரன் அஸ்வின் 2 விக்கெட்டுகளும், டிரெண்ட் பௌல்ட் , சந்தீப் சர்மா, சாஹல் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
அடுத்து 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 19 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்து ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தரப்பில் அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 45 ரன்களும், ரியான் பராக் 36 ரன்களும், ஹிட்மேயர் 26 ரன்களும், டாம் கோலர் 20 ரன்களும் எடுத்தனர். பெங்களூர் அணி தரப்பில் முகமது சிராஜ் அதிகபட்சமாக இரண்டு விக்கெட் வீழ்த்தினார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் இந்த வெற்றி மூலம் நாளை நடைபெறும் குவாலிபையர் 2வது போட்டியில் ஹைதராபாத் அணியுடன் மோதுகிறது. இதில் வெற்றி பெறும் அணி சென்னை சேப்பாக்கத்தில் வரும் 26ம் தேதி (ஞாயிறு) நடைபெறும் ஐபிஎல் இறுதிப்போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்ள போகிறது.
இந்தநிலையில் ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக ஆர்சிபிக்காக விளையாடும் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் அறிவித்துள்ளார். இதையடுத்து, சக வீரர்கள், ரசிகர்கள் அனைவரும் அவரை கௌரவித்து வழியனுப்பி வைத்தனர். 2008 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை மொத்தம் 17 ஆண்டுகள் ஐபிஎல் தொடரில் விளையாடிய வீரர்களில் ஒருவராக இருக்கிறார். முதன் முதலில் டெல்லி அணிக்காக விளையாடிய இவர் இறுதியாக ஆர்சிபி அணிக்கு விளையாடி ஓய்வு பெற்றிருக்கிறார்.
தினேஷ் கார்த்திக் ஐபிஎல் தொடரில் டெல்லி, பஞ்சாப், மும்பை, குஜராத் லயன்ஸ், கொல்கத்தா மற்றும் பெங்களூரு என மொத்தம் ஆறு அணிகளுக்கு விளையாடி இருக்கிறார். மேலும் சிஎஸ்கே அணிக்காக விளையாட வேண்டும் என்ற இவரது நீண்ட வருட கனவு கடைசி வரை நிறைவேறவே இல்லை என்பது சோகம். இவர் மொத்தம் 257 போட்டிகளில் 4842 ரன்கள் எடுத்திருக்கிறார். இதில் மொத்தம் 22 அரை சதங்கள் அடக்கம். ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் முதல் பத்து இடங்களில் தினேஷ் கார்த்திக் பெயரும் இடம் பெற்று இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தில் ஆர்சிபி அணியால் வாங்கப்பட்டு, அந்த ஆண்டு 183 ஸ்ட்ரைக் ரேட்டில் 330 ரன்கள் எடுத்தார். இதன் காரணமாக அந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பையில் இந்திய அணிக்கு விளையாடவும் தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Readmore: இன்று 5 மாவட்டங்களில் அரெஞ்சு அலெர்ட்…!