HCL நிறுவனம் தங்கள் ஊழியர்களின் விடுமுறை நாட்களை அலுவலக வருகை பதிவுடன் இணைக்கும் புதிய கொள்கையை அமல்படுத்தவுள்ளதாக moneycontrol.com ஆதாரங்களை மேற்கோள் காட்டி தெரிவித்துள்ளது. இந்தியாவின் 3-வது மிகப்பெரிய ஐடி சேவை மற்றும் மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான ஹெச்சிஎல், தனது ஊழியர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. ஹெச்சிஎல் நிறுவனத்தில் வீட்டில் இருந்து பணியாற்றும் பணியாளர்களை அலுவலகம் வர வைக்கும் வகையில் புதிய நடைமுறை கொண்டு வரப்பட இருக்கிறது.
கொரோனாவுக்குப் பிறகு வீட்டில் இருந்து பணியாற்றும் ஊழியர்களை மீண்டும் அலுவலகத்திற்கு வரவழைத்து 3 நாள் பணியாற்ற வேண்டும் என்ற விதியை அமல்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு எடுக்கப்பட்ட முடிவாகும். அதன்படி, ஹெச்சிஎல் டெக் ஊழியர்கள் வாரத்தில் குறைந்தது 3 நாட்களும், மாதத்தில் குறைந்தது 12 நாட்களும் அலுவலகத்தில் வேலை செய்ய வேண்டும். ஊழியர்கள் அலுவலகத்திற்கு வர தவறினால், அவர்கள் எத்தனை நாள் அலுவலகத்திற்கு வராமல் இருக்கிறார்களோ, அதற்கு இணையாக ஒவ்வொரு நாளுக்கும் அவர்களின் விடுமுறை நாட்கள் கழிக்கப்படும்.
இந்நிலையில் HR டிபார்ட்மென்ட் இந்த புதிய முறை அமலாக்கம் செய்யப்படும் என்றும், இது ஏற்கனவே நடைமுறையில் இருப்பதாகவும், விதிமுறைகளை மதிக்காதவர்களின் விடுமுறை நாள் குறையும், போதுமான விடுமுறை நாட்கள் இல்லாதவர்களின் சம்பளம் குறைக்கப்படும் என்றும் மின்னஞ்சல்கள் மூலம் ஊழியர்களுக்கு அனுப்பியுள்ளது.