வயநாடு நிலச்சரிவால் ஏராளமானோர் பலியானதற்கு காரணம் பசுவதையே எனவும் பசுக்களை கொல்வதை நிறுத்தவில்லையென்றால், மேலும் இது தொடரும் என பாஜக மூத்த தலைவர் கியான்தேவ் அஹுஜாபேசியிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில், கடந்த 29ஆம் தேதி வயநாட்டில் அடுத்தடுத்து நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இந்த நிலச்சரிவால் சூரல்மலை, முண்டக்கை, வைத்திரி, வெள்ளேரிமலை போன்ற கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. சுமார், 400 குடும்பங்கள் இந்த நிலச்சரிவில் சிக்கினர். மீட்புப் பணி 6-வது நாளாக நீடித்து வரும் நிலையில், ராணுவம், தேசிய, மாநில பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு துறை, விமானப்படை உள்ளிட்டோர் ஈடுபட்டுள்ளனர்.
தற்போது வரை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். சுமார் 360-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் தான், ராஜஸ்தான் முன்னாள் எம்எல்ஏவும், பாஜக மூத்த தலைவருமான கியான்தேவ் அஹுஜா ஒரு அதிர்ச்சி பேட்டி கொடுத்துள்ளார். அதாவது, ”கடந்த 2018ஆம் ஆண்டில் இருந்து கேரளாவில் நிலச்சரிவுகள், வெள்ளம், நிலநடுக்கம் அதிகரித்துள்ளது. இதற்கெல்லாம் பசு வதைதான் காரணம்.
உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசத்திலும் மழை வெள்ளம், நிலச்சரிவு ஏற்படுகிறது. ஆனால், அங்கெல்லாம் பெரிய பாதிப்பு இல்லை. அதுவே, வயநாட்டில் பலி எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்த பேரழிவுக்கு பசுக்களை கொன்ற பாவம் தான் காரணம். இனியும் கேரளா பசுக்களை கொல்வதை நிறுத்தாவிட்டால் நிலநடுக்கங்களும், நிலச்சரிவுகளும் தொடர்ந்து நடக்கும்” என கூறியுள்ளார்.
Read More : தமிழக மக்களே..!! மின்சார வாரியத்தின் இந்த அறிவிப்புகளை கவனிச்சீங்களா..? அனைவரது வீட்டிலும் இது முக்கியம்..!!