நாட்டில் இனி மருத்துவக் கல்லூரிகளில் சேரும் மாணவர்கள் படிப்பை பாதியில் கைவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது. இதுகுறித்து, மருத்துவக்கல்வி இயக்குனரகம் தெரிவித்த தகவலின் படி, எம்பிபிஎஸ் (MBBS), பிடிஎஸ் (BDS) படிப்புகளில் இடம் பெற்று, குறிப்பிட்ட காலவரையறைக்கு பிறகு படிப்பை விட்டு விலகினால், ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மருத்துவ மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 9,050 எம்பிபிஎஸ் இடங்களும், 2,200 பிடிஎஸ் இடங்களும் உள்ளன. இந்தப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பதிவு ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை நடைபெற்றது. கலந்தாய்வு ஆகஸ்ட் 21ஆம் தேதி தொடங்கியது.
முதற்கட்ட கலந்தாய்வில் எம்பிபிஎஸ் படிப்பில் 1,423 இடங்களும், பிடிஎஸ் படிப்பில் 1,566 இடங்களும் காலியாக இருந்தன. இதையடுத்து, இரண்டாம் கட்ட கலந்தாய்வு செப்டம்பர் 14ஆம் தேதி முடிவடைந்த நிலையில் நாளை தரவரிசை பட்டியல் வெளியிடப்பட உள்ளது. மாணவர்கள் செப்டம்பர் 26க்குள் தேர்வுசெய்த கல்லூரியில் சேர வேண்டும்.
இந்த நிலையில் மருத்துவக்கல்வி அதிகாரிகள் விடுத்துள்ள எச்சரிக்கை அறிவிப்பில் இரண்டாம் சுற்று கலந்தாய்வில் இடம் பெற்ற மாணவர்கள், விருப்பமின்றி கல்லூரியில் இருந்து விலக விரும்பினால், குறிப்பிட்ட காலத்துக்குள் அதைச் செய்யலாம். குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு விலகினால், ரூ.10 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும். மூன்றாம் மற்றும் இறுதி சுற்றுகளிலும் இதே விதிமுறைகள் செயல்படும், மேலும் கல்விக்கட்டணம் மற்றும் வைப்புத் தொகை திருப்பித் தரப்படமாட்டாது.
இது குறித்து அவர்கள் மேலும் கூறி உள்ளதாவது; மாணவர்கள் இடங்களை தேர்ந்தெடுக்கும் போது மிகவும் தெளிவாகவும், கவனமாகவும் செயல்பட வேண்டும். மாணவர்கள் படிப்பை கைவிட்டால் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். கவுன்சிலிங் முடிந்த பின்னர், கல்லூரிகளில் ஏற்படும் காலி இடங்களை குறைக்க இந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது.இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.