இசை என்றால் முதலில் நினைவிற்கு வருவது இளையராஜா தான். இவரது இசை, பலரின் இதயத்தில் இருக்கு காயத்தை மாற்றும் மருந்தாக இன்றும் உள்ளது. இவரது பேச்சு என்னதான் சர்ச்சைக்குரிய வகையில் இருந்தாலும், இவரது இசையை வெறுப்பவர்கள் யாரும் இருக்க முடியாது. இப்படி அவரது புகழைப் பற்றி பேசிக்கொண்டே போகலாம். இத்தனை புகழ் பெற்ற இளையராஜா தங்களின் படத்தில் இசையமைக்க மாட்டாரா என பல இயக்குனர்கள் காத்திருக்க, இவர் தனக்கு மலையாள படங்களுக்கு இசையமைக்க ஆசை என்று கூறியுள்ளார்.
ஆம், நேற்று முன்தினம் ஷார்ஜாவில் 43வது சார்ஜா சர்வதேச புத்தகத் திருவிழா கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக இளையராஜா கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில், ‛ஒரு இசை ஜாம்பவானின் பயணம்; இளையராஜாவின் இசைப்பயணம்’ என்கிற தலைப்பில் அங்கே வந்திருந்த ரசிகர்களுடன் இளையராஜா கலந்துரையாடும் நிகழ்ச்சி நடந்தது. இதில் கலந்துகொண்டு பேசிய இளையராஜா ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து வந்தார். அப்போது ஒருவர், ஏன் நீங்கள் அதிகம் மலையாள படங்களுக்கு இசையமைப்பதில்லை என்று கேக்க, அதற்கு இளையராஜா அளித்த பதில், பலருக்கு வியப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து அவர் பேசும்போது, “எனக்கும் மலையாள படங்களில் இசையமைக்க ஆசை தான். ஆனால் மலையாளிகளைப் பொறுத்தவரை வீட்டிற்கு ஒரு இசையமைப்பாளராவது இருக்கிறார்கள். அவர்கள் ஏற்கனவே அங்கே இசையை உருவாக்க துவங்கி விட்டார்கள். ஒருவேளை இதனால் தான் என்னை மலையாள திரையுலகினர் அழைக்கவில்லையோ என்னவோ..? இப்போதும் மலையாள திரைப்படங்களுக்கு இசையமைக்க அழைத்தால் நிச்சயமாக நான் தயாராக இருக்கிறேன்” என்று கூறினார்.
1978-ல், இளையராஜா ‛வியாமோகம்’ என்கிற மலையாள படத்திற்கு இசையமைத்தார். பின்னர், ‛யாத்ரா, மை டியர் குட்டிச்சாத்தான்’ உள்ளிட்ட சில படங்களுக்கு இசையமைத்தார் என்றாலும் அதன் பிறகு அவர் தமிழில் அதிக படங்களில் இசையமைத்ததால் மலையாளத்தில் அவரால் தொடர்ந்து இசையமைக்க முடியவில்லை. ஆனாலும் பெரும்பாலான மலையாள படங்களில் அவரது தமிழ் பட பாடல்கள் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதற்கு சமீபத்திய உதாரணம் மிகப்பெரிய வெற்றி பெற்ற மஞ்சும்மேல் பாய்ஸ் படத்தில் கண்மணி அன்போடு காதலன் பாடல் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.
Read more: 25 கோடி செலவில் எடுக்கப்பட்ட விக்கி – நயன் திருமண வீடியோ…. வெளியானது ட்ரைலர்!